Socialize

அரச ஊழியர்களை கைவிட்டுள்ள வரவு செலவுத் திட்டம் – 2013.

தாயகத்திலிருந்து விஜய்
ஜனாதிபதியும் நீதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ, 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை கடந்த வியாழன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். இந்த வரவு செலவுத் திட்டப் பிரேரணைகளில், பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடும், கிராமிய விவசாயிகளுக்கு பல சலுகைகளும், செல்வந்தர்களுக்கு நன்மையளிக்கும் விடயங்களும் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் மத்திய தர வர்க்கத்தினைச் சேர்ந்த மக்களுக்கு குறிப்பாக அரசாங்க, தனியார் துறை ஊழியர்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் வகையிலான முன்மொழிவுகள் முன்வைக்கப்படவில்லை.
தொடர்ச்சியான பொருள் விலையேற்றத்தினாலும், நீர்க்கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு என்பவற்றினாலும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வரும் அரச, தனியார் துறை ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து கோரிக்கைகளை முன்வைத்து வந்ததுடன், சம்பள உயர்வுக்கான போராட்டங்களையும் நடாத்தியும் வந்தனர். ஆகக் குறைந்தது 15000 ரூபா சம்பளவு உயர்வு வழங்கப்பட வேண்டும் என பல தொழிற் சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்தது.
எனினும் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில், அரசாங்க ஊழியர்களுக்கு 1500 ரூபா கொடுப்பனவு அதிகரிப்பினையே அறிவித்திருக்கிறார். அதிலும் ஜனவரி மாதத்திலிருந்து 750 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும், மீதித் தொகையானது மே மாதத்திலும், செப்டம்பரிலும் வழங்குதற்கும் முன்மொழிந்துள்ளார். சம்பள உயர்வு தொடர்பாக “சுமையினை அரசாங்கத்தினால் தாங்கிக் கொள்ள முடியுமா” என நோக்குதல் வேண்டும் எனவும், “அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் மக்களிடமிருந்து சேகரிக்கப்படும் வரிகளிலிருந்து செலுத்தப்படுகின்றன. எனவே எந்தவொரு சம்பள அதிகரிப்பும் மக்களினால் அதனை தாங்கிக் கொள்ள முடியுமானால் மாத்திரமே நியாயமானதாக இருக்கம்” எனவும் தெரிவித்திருக்கிறார். இலங்கை அரசாங்கத்தில் தற்பொழுது பணியாற்றும் 1,300,000 அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டினை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தேசிய சம்பளக் கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கும் புதிய சம்பள ஆணைக்குழு ஒன்றினை முன்மொழிந்திருக்கிறார். அந்தவகையில், இந்த வரவு செலவுத் திட்டத்தில் தனியார் துறை, தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள உயர்வுகள் வழங்குவது குறித்து ஜனாதிபதி கவனம் செலத்தவில்லை என்று கூறலாம்.
ஆயினும் பாதுகாப்பு படையினரிற்கான நலத்திட்டங்கள், கிராமிய மக்களுக்கான சலுகைகள், மற்றம் ஆடம்பரப் பொருட்கள் சிலவற்றிற்கான சலுகைகளும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களின் வீடமைப்பு நிலைமைகளை மேம்படுத்துவதற்கு மூன்று வருட புணரமைப்பு திட்டமொன்று முன்மொழியப்பட்டு, இதனை 2013 இலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு ரணவிரு அதிகார சபைக்கு 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே வேளை, பொலிஸ் கல்லூரி அபிவிருத்தி, பொலிஸ் நிலையப் புணரமைப்பு மற்றும் நிர்மானத்திற்கு 950 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவில் பாதுகாப்பு படையிலுள்ள அனைத்து சேவையாளருக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.
வறுமை ஒழிப்புத் தொடர்பில் இந்த வருடமும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதேச மட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள 14,000 பட்டதாரிகள் வறுமை தணிப்பு ஊக்கவிப்பாளர்களாக ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், வறுமை தணிப்பு முன்னெடுப்புகளுக்கு 15,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வறுமையான கிராம மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த பல இலவசத் திட்டங்களை தொடர்ந்தும் வழங்குவதுடன், இந்த வரவு செலவுத் திட்டத்தில், கிராமிய பாடசாலை மாணவர்களுக்கு இலவசமான பால், தானியம், முட்டை வழங்கல், அரையாண்டில் மேலும் ஒரு சீருடை, ஒரு சோடிப் பாதணிகள் போன்ற இலவச உதவித் திட்டங்களையும் ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.
விவசாயிகளுக்கு பல சலுகைகளை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். வரட்சியினால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 100,000 விவசாயிகளுக்கு உதவி வழங்க 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதை நெல் இலவசமாக வழங்கவதற்கும் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பெற்ற கடன்களை அறவிடுவதை தற்காலிகமாக நிறுத்துவதாகவும், வட்டிகளையும் நீக்கவதாகவும், அனைத்து விவசாயிகளுக்கும் உர மானியம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களின் வாழ்க்கைச் செலவுப்படி 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 65 வயதுக்கு மேற்பட்ட வருமானமற்றோருக்கு மாதந்தம் 5000 கொடுப்பனவு என்பனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பந்தயக் கார்களுக்கான வரிவிலக்கு, வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலடப்பட்டுள்ள பணத்தை மாற்றுவதற்கான அனுமதி என்பனவும் வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், விமான நிலைய வரி 10 டொலரால் அதிகரிப்பு, இணைய வழி விசாக்கட்டணம் 5 டொலரால் அதிகரிப்பு, பயன்படுத்தப்படாத காணிகள் சுவீகரிப்பு, வெளிநாட்டவருக்கு காணி விற்பனை தடை போன்றவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS