Socialize

அழகியதொரு புனைவில் கோரமான ஒரு நிதர்சனம்

ஸ்ரீரஞ்சனி

இனப்பிரச்சினையின் கோரத்தைப் பல எழுத்தாளர்கள், பல்வேறு வடிவங்களில், கவிதை, கதை, நாடகம், வரலாற்று ஆவணம் என்றெல்லாம் சிருஷ்டித்திருக்கிறார்கள். அவர்களின் எழுத்து வாசகர்களின் மனங்களில் பல வகையான தாக்கங்களை உண்டாக்கியிருக்கிறது. அவ்வகையில் மல்லிகையில் வெளிவந்த தெணியானின் ‘உவப்பு’ என்ற சிறுகதை இன்றும் என் மனதை விட்டு அகலாமல் நிற்கின்றது.

அந்தக் கதையின் கருவும் கதை ஓட்டமும் பாத்திர வார்ப்பும் உரையாடல்களும் அருமையாக, அற்புதமாக, மிகவும் யதார்த்தமாக இருக்கின்றன. தனக்கு ஒரு வாரிசு வந்துவிட்டது என அகமகிழ்ந்து அதற்கு செய்ய வேண்டிய அத்தனையையும் கஷ்டப்பட்டுச் செய்த பின், அது தன் வாரிசல்ல என அறிந்ததில் வந்த ஏமாற்றத்தை எண்ணிப் பார்த்த ஒரு ஆண் காகம், அப்படிச் சென்ற முறை நடந்தது போல தன் சோடி இம்முறையும் குயிலின் முட்டையை அடைகாத்து விடக்கூடாது என்பதை, தன் பாதிப்பாக மட்டும் சொல்லப் போய், பெண்காகத்தின் கோபத்துக்கு ஆளாகிறது.

அந்தச் சம்பவத்தால், ஊடல் கொண்ட பெண் காகத்தின் மேல் அந்த ஆண் காகத்துக்கு வரும் விரகதாபத்துடன் கதை அழகாக ஆரம்பமாகிறது. “உறக்கத்திலும் மென்மையான தன் அலகுகளால் என் இறகுகளைக் கோதிக் கோதி செல்லமாக மெல்லக் கொத்திக் கொடுத்து உறங்க வைத்தவள் இன்று தன் தலையை மடக்கிக் கழுத்துக்குள் முகத்தைச் சாய்த்துக் கொண்டு கிடக்கிறாள். தன் அலகுகளைக் கூராக்க வேண்டுமென்று பொய்ச் சாட்டுச் சொல்லிக் கொண்டு என் அல்கோடு அலகை உரசி உரசி கருவிழிகள் சிவந்து வர வெப்பமூச்செறிந்த வண்ணம் நெருங்கி வருகின்றவள் இன்று ஒதுங்கிக் கிடக்கிறாள்” என ஆண் காகம் தவிப்புறுவதாக அழகாக விவரிக்கிறார் தெணியான்.

‘என்னிலை ஏற்பட்ட கோபத்திலை இரண்டு நாளாய்ச் சாப்பிடாமலும் இருக்கிறாள்’ எனத் தனக்குள் நினைத்த ஆண் காகம், பெண் காகத்தின் கோபத்தைச் சமாளிக்க முயற்சிக்கும் ஒரு சைகையாக, “ஏன் ஒன்றையும் தின்னுறாய் இல்லை, இப்படிக் கிடந்தால், எப்படி பொரிச்ச கூட்டுக்காலை எழும்பப் போறாய்? என்று ஆதங்கத்துடன் கேட்கிறது. அதற்கு “ இந்த நேரத்திலை நாவுக்கு இதமா எல்லோ தின்ன வேணும். ஒண்டையும் தின்ன மனமில்லை “ என்கிறது பெண். ஆணுக்கோ ஒன்றும் புரியவில்லை. “அப்பம். படையல் சோறு, கோழித்தலை, ஆட்டெலும்பு, உனக்குப் பிடிப்பான குஞ்செலி—– எல்லாம் கொண்டு வந்து தந்தன். ஒண்டும் வேணாம் எண்டிட்டாய், நீ கோவத்திலை தான் தின்னாமல் கிடக்கிறாய் எண்டு நினைச்சன்” என்று ஆண் காகம் அப்பாவித்தனமாய்க் குழம்புகிறது. அதற்குப் பெண்காகம் “உங்களுக்குத் தானே தெரியும் கொஞ்சக் காலமாக நாங்கள் என்ன சாப்பிடுகிறமெண்டு” என்று சொல்கிறது.

அதை என்ணண்டு நெடுகத் தின்னுறது என வியந்தாலும், “சரி இப்ப கொண்டு வாறன்” என உடனே வெளிக்கிடும் ஆணைப் பார்த்து, “இப்ப எங்கை தேடப்போறியள்?” என அதிசயமாய்க் கேட்கிறது பெண் காகம்.

“அடி விசரி, மனிச இறைச்சிக்கும் இஞ்சை இப்ப பஞ்சமா, எங்கை போனாலும் குவிஞ்சு கிடக்குது. எது வேணும். ஈரலோ. மூளையோ?” என அகால வேளையில் ஆண் காகம் பறந்து போகிறது எனக் கதை நிறைவுறுகிறது.

நிதர்சனம் மனதில் உறையும் வண்ணம் வித்தியாசமான பாணியில் மிக எளிமையாக எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கதை. கோரச் சம்பவங்களை அதன் பாதிப்புக்களை விவரிப்பதால் ஏற்படும் அசெளகரியத்தை வாசிப்பவரின் மனதில் இது ஏற்படுத்தாமல் இருக்கும் அதே வேளையில் காலத்தின் அகோரமான பதிவை மனதில் அழுத்தமான சோகமாகப் பதிக்கிறது. அத்துடன் இதை வாசிக்கும் போது நல்லதொரு காதல் கதையை வாசிக்கும் திருப்தியும் ஏற்படுகிறது.

நன்றி: தூறல் 2010 மார்ச்

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS