Socialize

இசைக்கு இது தான் எல்லை

அசை 20-09-2012

கலை இலக்கிய விழாக்களில் தங்கள் திறமைகளை அற்;புதமாக வெளிப்படுத்தும் கலைஞர்களைக் கண்டு ஒரு காலத்தில் நான் புல்லரித்துப் போவதுண்டு. இப்பொழுது ஒன்றில் இவ்விழாக்களைத் தவிர்த்துக் கொள்வேன் அல்லது புல்லரிக்காது பார்த்துக் கொள்வேன்.  இப் புல்லரிப்புகளால் நிறைய நொந்து போனவன் நான்.
சில வருடங்களுக்கு முன்னர் நண்பர் வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்கள் ‘இசைக்கு ஏது எல்லை’ என்றொரு நிகழ்ச்சியை வருடா வருடம் நடாத்தி வந்தார். இசையார்வம் காரணமாகவும் புரவலராயிருப்பதற்கான செல்வந்தராகவிருந்த காரணத்தாலும் தனது பணத்தில் ஈழத்துக் கலைஞர்களைக் கொண்டு கர்நாடக இசை நிகழ்ச்சிகளை நடாத்தி அவர்களைச் சன்மானங்களோடு கௌரவிப்பது அவரது வழக்கம். நிகழ்ச்சிக்கு மண்டபம் நிறைய மக்கள் வராவிட்டால் இலகுவில் மனம் நொந்து விடுவார். இப்பொழுது அந் நிகழ்ச்சியை அவர் நடத்துவதில்லை.
ஒரு தடைவ இப்படியான நிகழ்ச்சியொன்றிற்குப் போயிருந்தேன். நிகழ்ச்சி மிகவும் நன்றாகவிருந்தது. முடிவில் மிகவும் திறமையாக வாசித்திருந்த ஒரு வாத்தியக்கலைஞரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தேன்.
சில நாட்கள் கழித்து அக்கலைஞரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவசரமாகச் சந்திக்க வேண்டுமென்று கேட்டிருந்தார். சந்திப்பின்போது ஒரு அவசர காரணமாக ஆயிரத்து ஐநூறு டாலர்கள் கடன் வேண்டுமென்றும் ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாகவும் கேட்டார். கலைஞர்களுக்கும் பஞ்சத்துக்கும் நெருக்கம் அதிகம் எனக் கருதி உடனடியாகக் கொடுத்து விட்டேன். ஒரு வாரத்தில் ஐநூறு டாலர்களைத் திருப்பித் தந்துவிட்டார். மிகுதி? சுமார் ஏழு ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆள் தலை மறைவாகிவிட்டார். பிறகுதான் கேள்விப்பட்டேன் அவருக்கு இப் பழக்கம் அத்துபடி என்று.
என் முகத்தில் ஏமாறும் சோணகிரி என்று எழுதி ஒட்டியிருக்கிறதோ என்னவோ இன்னுமொரு கலைஞனைத் தவறுதலாக வாழ்த்திவிட்டேன். அவனும் ஒரு இளம் நடிகன். அவன் நடித்த திரைப்படமொன்றைப் பார்த்தேன். மிக நன்றாக நடித்திருந்தான். முன் பின் யோசிக்காமல் வாழ்த்திவிட்டேன்.
அடுத்தநாளே அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தான் ஒரு குறும் படமொன்றைத் தயாரிக்கவிருப்பதாகவும் கமெரா ஒன்றை வாடகைக்கு எடுக்கவேண்டுமெனவும் ஒரு நாளையிலேயே சூட்டிங் முடிந்துவிடு;ம் ஒரு முன்நூற்று ஐம்பது டாலர்கள் தேவை எனவும் சொன்னான். படம் நாளொரு பொழுதும் பொழுதொரு வண்ணமுமாக முழு நீளத் திரைப்படமாக வளர்ந்து வருவதாகச் சொல்லி மடிக்கணனியில் சில காட்சிகளையும் காட்டி சுமார் ஐயாயிரம் டாலர்கள்வரை கறந்துவிட்டான்.
இரண்டு வாரங்களின் பி;ன்னர் அழைப்பொன்று வந்தது – அவனது சகபாடியிடமிருந்து. தமது மடிக்கணனி களவு போய்விட்டது படமும் தொலைந்துவிட்டது என்று. தலையில் துண்டொன்றைப் போட்டுக்கொண்டு நானும் என்னைத் தொலைத்துக் கொண்டுவிட்டேன். அதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
இதன் பிறகு இந்த ஸ்பொன்சர் வேலைகளுக்கெல்லாம் போவதில்லை. கலை இலக்கியம் இதெல்லாம் ஒரு பொருட்டேயல்ல என்பதுபோல் தன்பாட்டுக்கு இயங்குகிறது. அதன் காவலர்கள் புதிய சோணகிரிகளை இலகுவாகப் பிடித்துக் கொள்கிறார்கள். சமூகமும் தன்பாட்டுக்கு புதிய சோணகிரிகளை உற்பத்திசெய்து கொண்டிருக்கிறது. கலை உள்நாட்டுச் சரக்கா அல்லது வெளிநாட்டுச் சரக்கா என்பது பற்றி சமூகத்துக்கு அக்கறையில்லை. உருசி எங்கிருக்கிறதோ சனம் அங்கு முகாமடித்துவிடுகிறது. இறக்குமதி முகாமையாளர்கள் கலையின் பெயரால் தாங்கள் வளர்கிறார்கள்.
இசைக்கு இதுதான் எல்லை என்றவாறு நண்பர் சொர்ணலிங்கம் ஒதுங்கிக் கொண்டது ஏன் என்று இப்போது புரிகிறது!

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS