Socialize

எம்முடன் நாமே கதைப்பதன் மூலம் எமது சுயமதிப்பைக் கட்டி எழுப்புவோம்

ஸ்ரீரஞ்சனி
எமது சுயமதிப்பு, நாம் எம்மைப் பற்றி எப்படி எண்ணுகிறோம், எவ்வாறு உணர்கிறோம். எத்துணை பெறுமதியான ஆளாக எம்மைக் கருதுகிறோம் என்பனவற்றை எல்லாம் உள்ளடக்குகிறது. உயர்ந்த சுயமதிப்பு உள்ளவர்கள் தம்மைப் பற்றி மேலாக நினைப்பது போல் சுயமதிப்புக் குறைவானவர்கள் தம்மைப் பற்றித் தாமே தாழ்வாகக் கருதுகிறார்கள்.

பொதுவாக, எமக்குக் கிடைக்கும் எம்மைப் பற்றிய குறிப்புகள் தான், எமது சுயமதிப்பை உருவாக்குகின்றன. பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் போன்றவரிடமிருந்தோ அல்லது எம்மிடமிருந்தோ அந்தக் குறிப்புக்களை நாம் தினமும் பெறுகின்றோம். இப்படிக் கிடைக்கும் குறிப்புக்கள் நாம் பெறுமதியற்றவர்கள் என்றோ அல்லது நாம் கூடாதவர்கள் என்றோ சொன்னால் எமது சுயமதிப்பு தானாகவே தாழ்ந்து போகும். மாறாக அவை நாம் நல்லவர்கள் என்றோ அல்லது ஆற்றல் உள்ளவர்கள் என்றோ சொல்லும் போது எமது சுயமதிப்பைத் தானாகவே உயர்த்தி விடுகின்றது.

முக்கியமாக, நாம் அன்பு செலுத்துவர்களிடம் இருந்து வரும் எம்மைப் பற்றிய குறிப்புக்கள், எமது சுயமதிப்பில் குறிப்பிடத்தக்க பெரும் விளைவை ஏற்படுத்துகின்றன. எமது உறவுமுறை ஆரோக்கியமாக இருந்தால், அந்த உறவில் உள்ளவர் எமது பலங்களையும் பலவீனங்களையும் ஏற்றுக்கொள்பவராக இருப்பார். அதனால் எமக்கு உற்சாகம் தந்து எமது சுயமதிப்பு உயர உதவுவார். ஆரோக்கியமற்ற உறவு, எம்மைத் தாழ்த்திப் பேசுவதாய், எல்லாப் பிரச்சனைகளுக்கும் எம்மைக் குறை கூறுவதாய் இருக்கும். அப்படி ஒரு உணர்வுரீதியான துன்புறுத்தல் நிறைந்த உறவு எமக்கு இருக்குமானால், அது எம்மில் இருக்கும் உயர்வான சுயமதிப்பைக் கூட படிப்படியாகக் குறைத்து விடலாம்.

எங்களால் மாற்றக் கூடிய உறவுகளை மாற்றிக் கொள்ளலாம். மாற்ற முடியாத உறவுகளிலிருந்து தூர விலகி இருக்கலாம். ஆனால் மாற்றவோ, விலகவோ முடியாத உறவுகளின் பாதிப்பிலிருந்து மீள என்ன செய்யலாம்?
அதற்கு ஒரு வழி, எம்முடன் நாமே கதைப்பதன் மூலம் எங்களுடைய சுயமதிப்பைக் கட்டி எழுப்புவது தான். பொதுவாக எதிர்மறையான குறிப்புக்களைக் கேட்கும் போது நமக்கு நாமே “நான் ஒரு முட்டாள்”. என்றோ “இது எனது பிழை, என்னால் தான் இது நடந்தது” என்றோ கூறி எம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம். அப்படியில்லாமல் எங்களுடைய பலங்கள், நல்ல இயல்புகள் போன்றவறை நோக்கிய ஒரு குறிப்பாக, “நான் ஒரு நல்ல மனிதன், நான் ஒரு பெறுமதியான ஆள் என்ற பொருள்படும் நேர்மறையான பின்னூட்டலைத் தரும் வகையில் எம்முடன் நாம் கதைக்க எம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

சுயமதிப்பைக் கட்டி எழுப்ப எம்முடன் நாமே கதைக்கக் கூடிய சில உதாரணங்கள்:

நான் சந்தோஷமாக இருக்க வேண்டியவள்/ன்.
பிழைகள் விட்டு அதிலிருந்து திருந்த எனக்கு உரிமை இருக்கிறது.
வாழ்க்கையில் வெற்றியடையக் கூடிய திறமை எனக்கு உண்டு.
என்னில் அன்புள்ளவர்களும் இருக்கிறார்கள், எனக்குத் தேவையான போது அவர்கள் என் பக்கம் நிற்பார்கள்.
மற்றவர்கள் என்னை மரியாதையுடன் நடத்தவேண்டும் என நான் எதிர்பார்ப்பதற்கான தகுதி எனக்குள்ளது.
பின்வரும் வசனங்களை முடிப்போம்.

1. என்னால் சந்தோஷமாக இருக்க முடியும். நான் சந்தோஷமாக இருந்த ஒரு நேரம்
——————————–
2. நான் அன்பு செலுத்தப்படக்கூடியவள். என்னைத் துன்புறுத்தாமல் என்னில் அன்பில் செலுத்தியவர்கள் ———————————-
3. எனக்காகத் தீர்மானம் எடுக்க என்னால் முடியும். நான் நல்லதொரு தீர்மானம் எடுத்த நேரம் ——————————————
4. எனக்குத் திறமைகள் உண்டு. நான் சிறப்பாகச் செய்யக்கூடிய ஒரு விடயம் ———-
5. நான் ஒரு நல்ல சினேகிதன்/சினேகிதி. எனது சினேகிதனுக்குத் தேவைப்பட்ட பொழுதில் நான் உதவிய ஒரு பொழுது ————————-
6. நான் திடமான ஒரு ஆள். நான் திடமாக இருந்ததற்கான ஒரு உதாரணம் ————–
இவற்றை எங்களுக்கு நாங்களே அடிக்கடி சொல்லிக் கொள்ளுவதன் மூலம் எங்கள் சுயமதிப்பை நாம் வளர்க்க முயலலாம்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS