Socialize

கனடா இசைக் கலா மன்றம் அடுத்த பரிணாமம் எடுக்குமா?

நமு பொன்னம்பலம்

கனேடிய கர்நாடக இசை உலகுக்கு கனடா இசைக் கலா மன்றம் ஆற்றி வரும் பணிகள் எண்ணில் அடங்காதவை. வேறு எந்த மேற்கத்திய நாடுகளிலும் இல்லாத அளவுக்கு பற்பல ஆசிரியர்களையும் பல்வேறுபட்ட திறமைகளை தன்னகத்தே கொண்ட கர்நாடக மாணவ சமுகத்தையும் தன்னுள் உள்வாங்கி இம்மன்றம் ஆற்றி வரும் பணிகள் பல.

இருந்தபோதிலும் பாரிய வெற்றிடம் ஒன்றை இம்மன்றம் எம் சமூகத்திடம் ஏற்படுத்தியிருப்பதை யாரும் மறுக்க முடியாது. எம் சமுகத்தில் சாதாரண மக்கள் முதல் படித்து பட்டம் பெற்று
உயர்வுகொண்ட மனிதர்கள் வரை தமது குழந்தைகளை கர்நாடக இசைக்கு அறிமுகம் செய்யாத குடும்பங்கள் இல்லை என்றே கூறவேண்டும். இவ்வாறு பயின்ற சிறார்கள் அரங்கேறும் முதல் நாளில் நம் குடும்பங்கள் ஆனந்தப் பரவசம் அடைவதும் இம்மேடைகளில் இசைக் கலா மன்ற பிரமுகர்கள் வந்தேகி வாழ்த்துரை வழங்குவதும் சம்பிரதாயம்.

இம்மேடைகள் இத்தோடு இன்னொரு காட்சியையும் எமக்குத் தரும். அது எதுவெனில் கனடாவிற்கு வெளியில் இருந்து தருவிக்கப்பட்ட விற்பன்னர்கள் மேடையை அலங்கரிப்பார்கள். இது ஓரிரு வருடமல்ல இருபது வருடத்துக்கு மேலாக நாம் காணும் காட்சிகள். அரங்கேற்றம் பல ஆயிரம் டாலர்களை விழுங்கி விடும். அரங்கேறியவர்கள் அதேதினத்தில் அனாதையாகி விடுவார்கள்.

அண்மையில் ஒரு வீட்டுக்குச் சென்ற நேரத்தில் கடுகதி வேகத்தில் வீட்டார் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர். சில வருடத்திற்கு முன்பு அரங்கேறிய ஒரு இளம் கலைஞனின் தாயும் தந்தையும் இக்கலைஞனுடன் கோவில் மேடை ஒன்றுக்கு இடம் பிடிக்க ஓடுகின்ற காட்சியை நான் பார்த்தேன். அரங்கேறும் மேடைகளில் இறக்குமதிகளை பணம் கொடுத்து வருவித்துவிட்டு நாம் சின்ன மேடைக்கு அலைகின்ற காட்சி பரிதாபகரமானது. நாம் பணம் கொடுத்து எமது மேடைகளை இறக்குமதி சரக்குக்கு கொடுத்து விட்டு ஒரு இளம் சங்கீத சமூகத்தை ஊமைகளாக மாற்றி வருவது எதனால் என்பதை நாம் விளங்க முற்படவேண்டும்.

இந்த நிலைமையினை பல்வேறு தடவைகளில் நான் எழுதி வந்த போதிலும் பரிகாரம் கிடைக்காத நிலைமையினால் தொடர்த்தும் இதே கருத்தை மீண்டும் வலுயுறுத்த விரும்பியே இவ்வாறு எழுதுகிறேன்.

மறு முனையில் அரங்கேற்றம் செய்யும் புதிய கலைஞர்களும் அவர்தம் குடும்பமும் உள்ளூர் கலைஞர்களினால் ஏற்படுகின்ற சிரமத்தை உணர்ந்து வெளியூர் கலைஞர்கள் உதவியோடு அரங்கேற்றம் செய்ய எண்ணுவதாககக் கூறுவதிலும் ஓர் உண்மை உண்டு. உள்ளுர் கலைஞர்கள் தமது நேரத்தை அர்ப்பணிப்பு செய்வது கிடையாது என்ற குறையும் இருக்கவே செய்கின்றது.

இந்நிலையில் இசை கலா மன்றம் போன்ற அமைப்பு தனியே பரீட்சைகளை நடாத்தும் அமைப்பாக இல்லாமல் அடுத்த படிக்குத் தன்னை தயார் படுத்துவதும் அவசியம் ஆகின்றது. சுமார் இருபது வருடமாக இசை பயின்ற இளம் கர்நாடக கலைஞர்களை ஒரே அமைப்பின் கீழ் ஓர் கொண்டு வந்து அவர்தம் மேடைகளை எமது சமூகத்தின் முன் உருவாக்கிச் சாதனை படைக்கட்டும். அதேபோன்று அரங்கேறும் ஒவ்வொரு மேடைகளிலும் ஒரு பகுதி நேரமாவது உள்ளுர் கலைஞர்களின் பங்களிப்பை இசை கலா மன்றம் உறுதி செய்யட்டும். இவ்வாறு செய்யாத மேடைகளில் இசை கலா மன்ற பிரமுகர்கள் தோன்றி வாழுத்து வழங்குவதை நிறுத்தத் தயாரா?

எமது கலைஞர்கள் மேடைக்கு உரியவர்களேயன்றி சபைக்கு மட்டும் உரியவர்கள் அல்லர். கர்நாடக சங்கீத உலகு இதனை உணர்ந்து கொள்ளாது விட் டாலும் கூட இசை கலா மன்றமும் கூட இதனை உணராதா என ஏங்குகிறேன்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS