Socialize

கனவைக் குலைக்க வருகிறது… Ultra HDTV

ஜோர்ஜ்

உங்கள் வீட்டுக்கு வருவோர் போவோர் எல்லாம் பொறாமைப்படும்படியாக சுவரளவு சைஸில் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துப் பெருமைப்படுகிறீர்களா? உங்கள் பெருமிதத்தில் மண் அள்ளிப் போட வருகிறது அதிநவீன தொலைக்காட்சி. பாறாங்கல் சைஸில் இருந்த பழைய தொலைக்காட்சிகளை வீசி விட்டு, பலகை சைஸில் இருக்கும் தொலைக்காட்சியை வாங்கி விலாசம் காட்டப் போய் பட்ட கடன் அடைப்பதற்கு முன்னாலேயே வந்து தொலைத்திருக்கிறது இந்த நவீன தொலைக்காட்சி. High Definition TV எனப்படும் தற்போதைய தொலைக்காட்சிகள், பழைய பெட்டித் தொலைக்காட்சிகள் போலன்றி மிகவும் துல்லியமான படங்களைத் தரக் கூடியன. 720, 1080 பிக்சல் அளவுகளில் படங்களைத் தந்த இந்தத் தொலைக்காட்சிகளில் புளூ றே தட்டுகளில் வந்த கதாநாயகர்கள் சாகசம் புரிய, கனவுக்கன்னிகள் நித்திரையைத் தொலைக்க… நேரடியாகப் பார்த்த அனுபவப் பரவசம்.

Ultra High Definition TV எனப்படும் புதிய தொலைக்காட்சிகள் தற்போதைய தொலைக்காட்சிகளின் துல்லியத்தை விழுங்கி ஏப்பம் விடக் கூடியன.
கேபிள் இணைப்பு மூலம் நீங்கள் பெறும் தொலைக்காட்சிப் படங்கள் 720 பிக்சல் நீளமும் 480 பிக்சல் அகலமும் உள்ளவை. அதற்கு அடுத்ததாய், 720P எனப்படும் படங்கள் 1280 பிக்சல் நீளமும் 720 பிக்சல் அகலும் கொண்டவை. அதையும் விடச் சிறந்த 1080 i. 1080 P வகையின 1920 பிக்சல் நீளமும் 1080 பிக்சல் அகலமும் கொண்டவை.

ஆனால் தற்போது வரப் போகும் Ultra High Definition TV வகையின இவற்றுக்கெல்லாம் அப்பனானவை.
இவற்றின் படங்களின் அளவு 4K, 8K என இரண்டு வகைப்படுவன. இதில் முதலாவது 3840 பிக்சல் நீளமும் 2160 பிக்சல் அகலமும் கொண்டன. இவை தற்போதைய HDTV களை விட நான்கு மடங்கு துல்லியமானவை. அடுத்த வகையின 7680 பிக்சல் நீளமும் 4320 பிக்சல் அகலமும் கொண்டன. இவை தற்போதைய HDTV களை விட பதினாறு மடங்கு துல்லியமானவை.

இந்தத் தொலைக்காட்சிகளின் முதல் மொடல்களை கொரிய நிறுவனம் எல்ஜி உற்பத்தி செய்ய உள்ளது. 84 அங்குலத் திரை கொண்ட புதிய தொலைக்காட்சியை எல்ஜி அறிமுகப்படுத்த உள்ளது.
விலை? 22 ஆயிரம் டொலர்கள்.

அம்மாடியோவ் என்று அலறாதீர்கள். 42 அங்குல பிளாஸ்மா தொலைக்காட்சிகள் ஆரம்பத்தில் வட அமெரிக்காவில் 40 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனையாகின. இப்போது அவற்றை 500 டொலர்களுக்குள் பெறலாம்.

சோனி, ரொஷிபா நிறுவனங்களும் தற்போது களத்தில் குதிக்க உள்ளன.

இருந்தாலும், உடனடியாகவே இந்தத் தொலைக்காட்சிகள் வீட்டுக்கு வீடு வரப் போவதில்லை. காரணம் அவற்றிற்கான நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்வதற்கும், ஒளிபரப்புவதற்கும் இன்னமும் ஸ்டூடியோக்களும், கேபிள் நிறுவனங்களும் தயாராக இல்லை. இந்த விலை கொடுத்து இவற்றை வாங்கினாலும், துல்லியம் குறைந்த தற்போதைய படங்களை மட்டுமே பார்க்க முடியும்.

அதையும் விட, வீட்டுக்கு வைப்பதற்கு தொலைக்காட்சி வாங்கிய நீங்கள் இந்த 84 அங்குலத் தொலைக்காட்சியை வைப்பதற்கு பெரிய வீட்டை வாங்க நேரிடும். காரணம் இந்தத் தொலைக்காட்சியில் படம் பார்க்க நீங்கள் குறைந்தது இருபது அடி தொலைவில் இருக்க வேண்டி நேரிடும்.

எதற்கும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் முதலில் வாங்கி வயிற்றெரிச்சனைக் கிளப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு 22 ஆயிரம் டொலர்கள் என்ன பெரிய காசா? ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தும் மண்டபக் காசு தானே?

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS