Socialize

சர்வதேச அங்கீகாரம்! சம்பந்தர் தலைமைக்கு கிடைத்த வெற்றி!


சென்ற வாரம் டெல்லி சென்ற இலங்கை சனாதிபதி ராஜபக்ஷே டெல்லி அரசியல் ஆலோசகர்களுடன் மந்திராலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழர் தரப்பிடம் குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு டெல்லி பரிந்துரை செய்திருக்கின்றது.

இப் பரிந்துரையானது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் சம்பந்தர் தலைமைக்கும் மீண்டும் டெல்லி அளித்த அங்கீகாரம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத் தேர்தலை அடுத்து அரசியல் நகர்வுக்கு காத்திருந்த வேளையில் இந்த டெல்லியின் சமிக்கையானது பெரும் ஆசீர்வாதமாகவே கருதப்பட வேண்டிய ஒன்று.

இந்திய மத்திய அரசின் இந்த அரசியல் ரீதியான முடிவு ராஜபக்ஷே அரசிற்கு பெரிய அரசியல் சிக்கல்களை உருவாக்கக்கூடும். ஏனெனில் ஐக்கிய நாடுகள் ஒன்றியத்தின் மனித உரிமைசபையின் முன் இவ்வருட இறுதியில் மீண்டும் விவாதத்திற்கு வரவுள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இந்திய ஆதரவை ராஜபக்ஷே அரசு கோரக்கூடும். அதிகார பரவலாக்கல் பற்றி தொடர்ந்தும் இழுபறிக் கொள்கையை எடுத்து வரும் ராஜபக்ஷே அரசு சர்வதேச மட்டத்தில் பெரும் சவால்களை இந்திய ஆதரவின்மையால் சந்திக்க நேரும்.

அதே நேரத்தில் டெல்லி மத்திய அரசு, ராஜபக்ஷே அரசு கிழக்கு மாகாணத்தில் பெற்ற வெற்றியின் பலனாக தமிழ் மக்கள் மத்தியில் கூட ஆதரவை பெற்ற நிலையில் அரசியல் தீர்வுக்கு வழி சமைக்கும் தார்மீக உரிமையையும் கடமைபாடையும் கொண்டிருக்கின்றது என நம்புகின்றது. அதிகார பரவலாக்கல் இலங்கை தீவு முழுமைக்கும் அரசியல் ரீதியான தீர்வையும் சமரசத்தையும் ஏற்படுத்தும் என நம்புகின்ற இந்திய மத்திய அரசின் முடிவானது இராணுவ ரீதியாக அரசியல் எதிர்ப்புகளை அடக்கும் இலங்கை அரசின் போக்கை எதிர் கொள்ளத் தக்கது என்பதுவும் கண்கூடு.

இந்நிலையில் டெல்லி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ராஜபக்ஷே விஜயத்தின் போது காட்டியிருக்கும் சமிக்கை இலங்கையில் உள்ள தமிழ் மிதவாதிகளுக்கும் குறிப்பாக சம்பந்தர் தலைமையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கிடைத்த பாரிய அரசியல் அங்கீகாரமாகவே பார்க்கப்படுகின்றது.

வட மாகாண சபைக்குரிய தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள இலங்கை அரசை இந்திய அரசின் அரசியல் ரீதியான காய் நகர்த்தல்கள் மேலும் சர்வதேச மட்டத்தில் தனிமைபடுத்தும் என எதிர்பார்க்கலாம்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS