Socialize

சிறையாரும் மடைக் கிளியே….

அசை
சிவதாசன்
எனக்கு சில நாட்களாக – வருடங்களாக என்றும் சொல்லலாம் – ஒரு கவலை. ஈழப் போரில் நாம் தோற்றுப் போனதற்கு இந்தியாவைக் குறிப்பாக மலையாளிகளைக் குற்றம் சாட்டுகிறோமே. எமது மூதாதையர்களே மலையாளிகளாகவிருக்கும்போது ஏன் அவர்கள் எங்களைப் பழிவாங்கினார்கள்? எங்களுக்கும் மலையாளிகளுக்குமிடையோன இரத்த உறவைவிட அவர்களுக்கும் ரஜீவ் காந்திக்குமிடையோன அரசியல் உறவு அத்தனை அத்தனை முக்கியம் பெற்றுவிட்டதோ? அதுவும் தலைவரது பூர்வீகமே கேரளமாகவிருந்தும்கூட அவரையாவது விட்டு வைக்கவில்லையே இந்த மலையாளிகள்? தயவு செய்து மலையாளிகளை இழிவுபடுத்துவதாகக் கருத வேண்டாம். அப்படியானால் நீங்கள் உங்களையே இழிவுபடுத்துவதாகவே இருக்கும்.
அதெப்படி ஈழத் தமிழரை மலையாளிகளோடு உறவு கொண்டாடுவது என்று நீங்கள் பொருமுவது தெரிகிறது. எல்லாம் இந்த பொதுமைப்படுத்தல் தத்துவத்தின் பாதிப்புத்தான்.
நாங்கள் யூதர்களைப் போன்று மூளைசாலிகள் என்கிறோம். இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் மலையாளிகள் என்பதையும் ஒத்துக் கொள்கிறோம். யூதர்களுக்கும் மலையாளிகளுக்கும் இரத்த உறவுகள் இருப்பதாக வரலாறு கூறுகிறது. காலனி ஆட்சிக்காரருக்கு ஆலோசனை வழங்கிய எம்மைப் போலவே மலையாளிகளும் மத்தியில் எந்த ஆட்சி நடைபெற்றாலும் அவ்வாட்சியினருக்கு ஆலோசனை வழங்குபவர்கள். பிறகென்ன வேண்டிக் கிடக்கிறது?
இதையெல்லாம் விட இன்னுமொரு பொதுமைதான் எமக்கும் மலையாளிகளுக்குமிடையேயுள்ள உறவை மிகவும் வலுவானதாக ஆதாரம் காட்டி நிற்கிறது. நாமும் அவர்களைப் போலவே மடையர்கள். நீர் விரும்பினால் மடையனாக இருந்துவிட்டுப் போ அதற்கு எங்களை ஏன் இழுக்கிறாய் என்கிறீர்களா?
எனக்கும் அந்தப் பயமுண்டு. ஒரு நாள் நித்திரையால் எழும்பும்போது நானும் ஒரு மடையனாக மாறிவிடுவேனோ என்று. என் உடம்பிற்குள் ஒரு மலையாளி சிறைப்பட்டிருக்கிறானோ என்றொரு பயம் தான். நான் பிறந்த ஊர் அப்படி.
சமையல்காரரை மடையர் என்று அழைக்கும் வழக்கு இருந்தது ஒரு காலத்தில். எனக்குத் தெரிந்து எங்கள் ஊரிலேயே முதலாவது சாப்பாட்டுக் கடை நடாத்தியது ஒரு மலையாளி. யாழ்ப்பாண நகரம் தொடக்கம் வெள்ளவத்தை வரையில் மலையாளிகளின் சாப்பாட்டுக் கடை இல்லாது தமிழர் வாழ்ந்திருக்க முடியாது. அவர்கள் உள்ளுரில் கல்யாணம் கட்டியிருந்தாலும் கள்ளத் தோணிகளாக் காட்டிக் கொடுக்கப்பட்டு –ஆஹா அந்தக் காலத்திலுங் கூடவா? – அனுப்பப்பட்ட பின்னர் அம் மடைகளின் மனேஜ்மென்ட் ஒரு வகையில் exclusive ஆக எனது ஊர்க்காரரிடம் கை மாறியது வரலாறு.
சரி நாம்; மலையாளிகளேதான் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் வெளிநாடுகளில் எங்கள் மக்களில் பெரும்பாலோர் இன்னும் மடையர்களாவே இருந்து வருகிறார்கள் என்பது. அது எமது மரபணுவில் நிரந்தர வதிவிடம் பெற்றுக் கொண்டுவிட்டது. சில வருடங்களுக்கு முன்னர் ரொறோன்டோவிலிருந்து சென்ற ஒரு புத்திசீவி தமிழ்நாட்டில் ஒரு மாநாட்டில் பேசியபோது இவ் விடயத்தை மிகவும் காத்திரமாக உறுதிப்படுத்தியிருக்கிறார். அதாவது கனடாவில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் உணவுச்சாலைகளில் பணிபுரிவார்கள் அல்லது டாக்சி ஓட்டுவார்கள் என்று அவர் பேசியிருக்கிறார்.
சரி எனது ஆய்வுக்கு முத்தாய்ப்பு வைப்பதுபோல் இன்னுமொன்றையும் சொல்லி விடுகிறேன். மடைத் தொழில் நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு இழிதொழிலல்ல. எங்கள் குலத் தொழில் எனச் சங்கநூல்களே விதந்துரைக்கின்றன. புறநாநூற்றில் முரஞ்சிய10ர் முடிநாகராயர் என்னும் புலவர் சேர மன்னன் ஒருவனைப் (மலையாளி) புகழ்ந்தேத்திப் பாடிய பாடல் ஒன்றில் “குருஷேத்திரத்தில் நடந்த பாரதப் போரில் பாண்டவர் கௌரவர் ஆகிய இரு சேனைகளுக்குமே போர் நடந்த நாட்களில் உணவளித்த சேர மன்னனைமூதாதையராகப் பெற்ற பேறு படைத்தவனல்லவா நீ” என்று புகழ்கிறார் புலவர்.
அப்போதே பல்லாயிரம் கல் தொலைவில் நடைபெற்ற ஒரு event இற்கு  நாம் onsite delivery– அதுவும் இரண்டு எதிராளிக் கட்சிகளுக்கும் – catering செய்திருக்கிறோம். இத்தனை ஆயிரம் வருடங்கள் கழிந்தும் இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்தும் இன்னும் மெருகோடு அதே தொழிலைச் செய்து வருகிறோம். நினைக்கவே மயிர்க்கூச்செறிகிறது.
சோழர்களைப் போல் சேரர்கள் நாடுகளை வெற்றி கொள்ளவில்லைத் தான் ஆனால் நன்றாக சமைத்துப் போட்டிருக்கிறார்கள் அக்கால சேரன் தொடக்கம் இக்கால மேனன் வரை. தமிழ்நாட்டில் அம்மா கட்சிக்கும் ஐயா கட்சிக்கும் ஏக காலத்தில் catering செய்வதென்பது பாரதப் போரில் படித்ததாய் இருக்க வேண்டும்.
என்ன நம்ம நாட்டிலும் அதுதானே நடக்கிறது என்கிறீர்களா? நாம் யார்? எமது பூர்வீகம் என்ன?

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS