Socialize

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் பலப்படுத்தப்படும். – இரா. சம்பந்தன் தெரிவிப்பு.

தாயகத்திலிருந்து விஜய்

வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் இரா. சம்பந்தன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் பலப்படுத்தப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை (23.09.2012) வவுனியா நகர சபை மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் இடம் பெற்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்துப் பேசுகையிலேயே இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை முன்நகர்த்துவது தொடர்பாக பேசிய இரா. சம்பந்தன், தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த போது கொள்கை அடிப்படையிலும் புரிந்துணர்வு அடிப்படையிலும் ஒத்தியங்குவதற்கு உருவாகிய கூட்டமைப்பு இன்று சர்வதேச அங்கீகாரம் பெற்ற சக்தியாக வளர்ந்திருக்கிறது. தேர்தல் காலங்களில் மக்களிடம் கூட்டமைப்பாகவே ஆணை கேட்கிறோம். பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு என்றே பேசுகிறோம். சர்வதேச சக்திகளோடு கூட்டமைப்பாகவே கலந்துரையாடுகிறோம். கூட்டமைப்பை யாரும் உடைத்துப் போடுவதற்கு முனையக்கூடாது. இடம் கொடுக்கவும் கூடாது எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கூட்டமைப்பை ஒரு பொறிமுறைக்குள் உட்படுத்துவதற்கு ஆலோசனைகள் கட்சித் தலைவர்கள், சட்டவல்லுநர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. அவை குறித்து எட்டப்படும் முடிவுகள் புரிந்துணர்வு உடன்பாடாக உருவாகி கூட்டமைப்பின் செயற்பாடுகள் பலப்படுத்தப்படும். எதிர்வரும் காலத்தில் தமிழர்களின் வலிமையான சக்தியாக தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளும் சக்தியாக கூட்டமைப்பே இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

தொரடந்து உரையாற்றுகையில், கூட்டமைப்பில் தற்போதுள்ள கட்சிகள் தங்களுடைய சொந்த அடையாளங்களைப் பேணலாம். அது அவர்களின் உரிமை. ஆனால் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பங்கள் நெருங்கி வருகின்ற போது கூட்டமைப்பு இன்னமும் வலிமை பெற வேண்டும் எனவும், கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் மாத்திரமல்ல கொள்கை ரிதியாக ஒன்றுபடக் கூடிய ஏனைய கட்சிகளும் வரலாம். அது குறித்துப் பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றோம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் வெறும் உணர்வுகளுக்கு பலியாகாமல், நிதானம் தவறாமல் பொறுப்போடு செயற்பட வேண்டிய காலமென்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும். கூட்டமைப்பை பலவீனப்படுத்தி தமிழர்களின் பலத்தை பலவீனப்படுத்தி எதிர்த்தரப்பை பலப்படுத்தி சர்வதேச முயற்சிகளை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கிறார்.

கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்துக்களும் வலியுறுத்தல்களும் நிலவி வருகின்ற நிலையில், அவ்விடயம் குறித்து செயற்குழக் கூட்டத்திலும் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையிலேயே இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS