Socialize

தமிழ் சினிமா கைவிட்ட காந்திமதியும் மனோரமாவும்

குவார்னிகா

தமிழ் சினிமா ஒரு காலகட்டத்தை இழந்துகொண்டிருக்கிறது. தமிழ்ச் சினிமாவின் முன்னோடிகள் என்று நாம் யாரையெல்லாம் கொண்டாடினோமோ அவர்கள் தமது இறுதிக் காலங்களை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் திலகம், நடிகர் திலகம், புரட்சி திலகம் என்ற தமிழ்த் திரையின் மூன்று திலகங்களும் மறைந்து விட்டன. அந்த மூன்றிற்கும் முன்னின்று சண்டையிட்ட வில்லன்களும் மறைந்து விட்டார்கள்.
இடையே ஓடிக்கொண்டிருந்த நகைச்சுவையாளர்களில் அதிகம் பேர் மறைந்துவிட்டார்கள். தற்போது தனது காலத்தையும் நினைவையும் மறந்து கடைசிக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை மனோரமா. 1000 படங்களுக்கு மேல் நடித்த பெருமையும் சாதனையும் பெற்றவர் அவர். தமிழ்ச் சினிமாவின் அத்தனை அட்டூழியத்தையும் புரிந்து கொண்டு தமிழகத்தின் முக்கிய முதலமைச்சர்களோடும் நடித்துக் காட்டியவர்.
1958இல் மாலையிட்ட மங்கை தொடக்கம் இப்போதுவரை சினிமா தொலைக்காட்சித் தொடர் என தனது நடிப்புலக வாழ்வில் கொடிகட்டிப் பறந்தவர்.தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில் ஜில் சுந்தரியை மறந்து விடமுடியாதபடி நடித்துக் காட்டியவர். தமிழ்ச் சினிமாவில் ஆச்சி என்றழைக்கப்ட்ட மனோரமா அவர்கள் தனது கடைசிக்காலத்தில் அதிகமான குணச்சித்திர வேடத்தில் நடித்தப் பகழ் பெற்றவர்.
ஆனால் நாமெல்லாம் இந்த ஆச்சிக்குள் நாம் மறந்துவிட்ட அற்புதமானஒரு நடிகை இருக்கிறார். அவர்தான் காந்திமதி. தமிழ் திரையுலகில் ஓர் பழம்பெரும் நடிகை. கிட்டத்தட்ட 350 திரைபடங்களில் பல்வேறு மண்வாசனையுடன் கூடிய குணச்சித்திர வேடங்களில் நடித்து பரவலாக “காந்திமதி அக்கா” என அழைக்கப்பட்டவர். இந்தியப் பொதுவுடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியின் மேடைகளில் பாடியும் புரட்சிகர நாடகங்களில் நடித்தும் வந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான யாருக்காக அழுதான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மூன்றாம்பிறை சுவரில்லாச் சித்திரங்கள், கரகாட்டக்காரன் போன்ற மிக முக்கிய படங்களில் நடித்து தக்க இடம் தேடியவர்.
தனது மொழியின் உச்சரிப்பிலேயே தனக்கான பாத்திரத்தை வடிவமைக்கும் பாணியைக் கைவரப்பெற்றவர் அவர். அடியேய்ய்…..எடுபட்ட சிறுக்கி…… என்பதும் ஒட்ட அறுத்துப்புடுவேன் அறுத்து என்பதும் அவரது புகழ் பெற்ற வசனங்கள். அவரது கிராமத்தின் நெழிவும் உடல்வாகும் உச்சரிப்பும் பாரதிராஜாவைக் கண்டடைய வைத்தது. உடனே மூன்றாம்பிறை குருவம்மா வந்தாள். தமிழ்ச் சினிமாவில் நாகரிக மொழி கொண்டு கதாநாயகர்கள் நகர்ந்து கொண்டிருக்க நாகரிகமற்ற மொழியினூடு காந்திமதி போன்றவர்களால் கதை நகர்ந்து கொண்டிருந்தது.
காதலும் காதல் மறுப்புமே கதையாகிப் போய்விட்ட சினிமாவிற்குள் கட்டறுபட்ட மொழி காந்திமதியின் நடிப்புக்கூடாக சினிமாவின் தரத்தைச் சாத்தியமாக்கியது. இந்த மொழியும் உடல் வாகும் திரையில் பல இடங்களில் மனோரமாவுக்குச் சாத்தியப்படவில்லை. 1000 படங்களுக்கு அதிகமாக நடித்திருந்தாலும் தான் இன்னும் அரவாணியாக நடிக்கவில்லை அந்த ஆசை எனக்கிருக்கிறது என மனோரமா கவலைப்பட்ட இடங்கள் உண்டு. மனோரமாவுக்குரிய பாத்திரத்தை, ஒரு திரைக் கதையை தமிழ்ச் சினிமா இதுவரை கொடுக்கவில்லை. அவரும் அதை நோக்கி இருக்கவில்லை. மனோரமாவை விட மிகக் குறைந்தளவு படங்களே காந்திமதி நடித்திருந்தாலும் பெயர் சொல்லும் படங்கள் பாத்திரங்கள் உண்டு.
ஆனாலும் தமிழ்ச் சினிமா அவரையும் கைவிட்டது. கமலஹாசன்களும் ரஜனிகாந்துகளும் நிறைந்திருக்கும் தமிழ் நாட்டுச் சினிமாவிற்குள் உண்மையான கலைஞர்களுக்கு வேலையில்லை. உண்மையில் நிலை கொள்ளத்தக்க, பெயர் பதித்திருக்கக்கூடிய தமக்கான சினிமாவை மனோரமாவும் காந்திமதியும் நடித்திருக்க வேண்டும். தமிழ்ச் சினிமா அவர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். வெறுமனே பணமும் பொய்யும் புரளும் சினிமாவிற்குள் இது சாத்தியமில்லை. காந்திமதியும் மனோராமாவைப் போலவே நாடகத்துறையில் இருந்து தமிழ்ச்சினிமாவிற்கு வந்தவர். அவர்களிடம் சினிமாவை முழுமையாகக் கையகப்படுத்தும் திறன் மிக அதிகமாகவே இருந்தது. ஆனாலும் அவர்களை எந்த இயக்குனர்களும் பயன்படுத்தவில்லை. ஓரளவுக்குப் பயன்படுத்திய பாரதிராஜாவும் பாக்கியராஜாவும் தமது கதையை நகர்த்தப் பயன்படுத்தியதோடு விட்டுவிட்டார்கள்.
தற்போது நாடகத்துறை தந்த சினிமாக்காரர்களின் காலம் முடிந்து கொண்டிருக்கிறது. சினிமாவுக்காகவே வாழ்ந்த பெரும் கலைஞர்களும் வாழ்விற்கும் அப்பால் சினிமாவை நேசித்த கலைஞர்களும் மறைந்து கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சினிமா வெறும் வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது. சினிமா என்ற மிகப்பெரிய ஊடகம் தமிழ்ச் சமூகத்தில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கூட அறியாமல் நமது அடுத்த தலைமுறையும் பாழாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS