Socialize

தோல்வியின் ரகசியம்

The Best Thing About You Is You

சுமதி

எப்போதும் வெற்றியின் ரகசியமே பேசிக்கொள்ளப்படும். தோல்வியின் ரகசியம் என்பது மறைக்கப்பட்டும், மறுக்கப்பட்டும் விடும். ஒரு நாட்டை எடுத்துக்கொண்டால் அந்த நாட்டின் வளங்கள், மக்கள் எவ்வளவு சந்தோஷமாக வாழ்கின்றார்கள் என்பதனையே அந்நாட்டு அரசு சுட்டிக்காட்டும். அதே போல் ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டாலும் தமது வாழ்க்கையின் வெற்றி, குழந்தைகளின் திறமை போன்றவற்றையே அனைவரும் உயர்வாகப் பேச விரும்புவார்கள். தமது நாட்டில் அடிப்படைத் தேவைகளற்ற நிலையில் எவ்வளவு மக்கள் நாளாந்தம் வாழ்விற்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது பற்றியோ, தனது குடும்பத்தில் எப்படியான கீழ்மட்ட வேலைகளைச் செய்து தாம் முன்னுக்கு வந்தோம், இல்லாவிட்டால் சமூகத்தால் அங்கீகரிக்க முடியாத தவறுகளைக் குழந்தைகள் செய்திருக்கின்றார்கள் என்பது பற்றியோ எவரும் மூச்சுக் கூட விட விரும்புவதில்லை.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக 450 ஹிந்தி திரைப்படங்களுக்கு மேல் நடித்து, தனது வாழ்நாள் சாதனைக்கான விருதையும் பெற்றுக்கொண்டு ஹிந்தி திரைப்பட நடிகர் அனுபாம் கீர் “The Best Thing About You Is You” எனும் தனது புத்தகத்தின் மூலம் தன் நாட்டின், வாழ்வின் மறைக்கப்பட வேண்டிய பக்கங்களையும், அதனை தளமாகக் கொண்டு, அந்த அனுபவங்கள் மூலம் தான் வாழ்வில் கற்றுக்கொண்டவற்றையும், அதன் மூலம் தான் அடைந்த வெற்றிகளையும் எழுத்தில்கொண்டு வந்து, உலகெங்கும் சிறந்த எழுத்தாளராக அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.

வழமையாக தமது வாழ்வின் இலட்சியத்தை அடைந்து விட்டதாக எண்ணும் மனிதர்கள் தங்கள் சுயசரிதையைத்தான் எழுத்தில் கொண்டுவர விரும்புவார்கள். மாறாக அனுபாம் கார் இளம் தலைமுறையினருக்கு தன்நம்பிக்கையும், ஊக்கமும் கொடுக்கும் வகையில் தனது எழுத்துத் திறமையை உபயோகித்திருப்பதாற்காக் பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றார். இரண்டு புகழ்பெற்ற வெளியீட்டார்கள் தன்னுடைய சுயசரிதையை வெளியிடக் கேட்டிருந்த போது, என் வாழ்க்கையைப் பற்றிப் பதிவு செய்யத் தொடங்கினேன். புதிவில் அனேகம் வாழ்வின் எதிர்மறையான கருத்துக்களே பதிவாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் சிரித்துக் கொண்டேன். இறுதியில் சுயசரிதை எழுதும் எண்ணைத்தை மாற்றிக் கொண்டுவிட்டேன் என்று கூறும் இவரின் படைப்பு ஜெயப்பூரில் இடம்பெற்ற இலக்கிய விழாவில் பல பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றது.. இவரின் துணிச்சலைக் கண்டு பல அமெரிக்கப் பல்கலைக்கழங்கள் அவரை உரையாற்றுமாறு அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தியத் திரைப்பட உலகமென்பது எப்படியான அரசியலைக் கொண்ட ஆபத்துக்களால் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வுலகிற்குள் இருக்கும் அனைத்து சவால்களையும், அரசியல்களையும் அமைதியாக எதிர்கொண்டு தான், தனக்கான வெற்றியை எப்படிப் பெற்றுக்கொண்டேன் என்பது பற்றி உதாரணங்களோடு விளக்கியிருக்கும் அனுபாம் கீர, இப்புத்தகம் இளைய தலைமுறையினரை தன்நம்பிக்கையோடு முன்னேற்றத்திற்கு எடுத்துச் செல்லப் பெரிதும் உதவும் என்று கூறுகின்றார். உளவியலாளர்களும் அதை நம்புவதால்தான் அவரை அழைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு உரையாற்ற வைக்குமாறு பரிந்துரைக்கின்றார்கள்.

இப்படியான எழுத்துக்கள் போரால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்கும், முக்கியமாக மாணவர்களுக்கும் உதவும். தன்நம்பிக்கையோடு செயல்படும் எழுத்தாளர்களும்,அவர்கள் உழைப்புக்களும் என்றுமே மக்களுக்கு மனதில் உற்சாகத்தைக் கொடுத்து உளவியல் பாதிப்புகளிலிருந்து அவர்களை மீட்டுக்கொண்டு வரும் என்று ஆய்வாரள்கள் கூறுகின்றார்கள்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS