Socialize

பால், பாலின அடையாளம், பாலியல் போக்கு

ஸ்ரீரஞ்சனி

மனிதஉடல் பல இலட்சம் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளது. அந்தக் கலங்கள் ஒவ்வொன்றிலும் 23 சோடி நிறமூர்த்தங்கள் காணப்படுகின்றன. நிறமூர்த்தங்களினுள்ளே பல ஆயிரக்கணக்கான பரம்பரை அலகுகள் உள்ளன. இந்தப் பரம்பரை அலகுகளின் வேறுபட்ட சேர்க்கைகள்தான் மனிதர்கள் ஒவ்வொருவரும் தமக்கென தனித்துவம் கொண்டவர்களாக இருக்கக் காரணமாகின்றன.

ஒவ்வொருவரிலும் இருக்கும் இந்த 23 சோடி நிறமூர்த்தங்களில் உள்ள ஒரு சோடி நிறமூர்த்தங்கள், அவரின் பால் (sex) எதுவென நிர்ணயிக்கின்றன. பெண்பால் ஆயின் XX எனவும் ஆண்பால் ஆயின் XY எனவும் அவை அடையாளப்படுத்தப்படுகின்றன. பெண்ணில் நிகழும் முட்டையாக்கத்தின் போதும் ஆணில் நிகழும் விந்தாக்கத்தின் போதும் அவர்களின் இனப்பெருக்கக் கலங்களில் நிகழும் விசேட செய்முறையான ஒடுங்கற் பிரிவு, இந்த XX ஐயும் XY ஐயும் X, X ஆகவும் X, Y ஆகவும் தனித்தனியே பிரித்து விடுகின்றது. பின்னர் கருக்கட்டலின்போது பெண்ணின் ஒரு பகுதியும் (முட்டை) ஆணின் ஒரு பகுதியும் (விந்து) சேரும்போது அவை மீண்டும் சோடியாகிக் கொள்கின்றன.

கீழே உள்ள விவரணப்படம் பிள்ளையின் பால், ஆண்பால் அல்லது பெண்பால் என எப்படி நிர்ணயிக்கப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது. பால் எதுவென முடிவாக்கும் அதிகாரத்தை இயற்கை, ஆணின் விந்துக்குத்தான் வழங்கி இருந்த போதிலும் கூட பிள்ளை பெண்பாலாகவோ அல்லது ஆண்பாலாகவோ இருப்பதற்கான சந்தர்ப்பம் சமனாகத்தான் உள்ளது.

ஆனால் பெண்ணாகப் பிறப்பவர்கள் எல்லோரும் பெண்ணாகத்தான் தம்மை இனம் காண்பார்கள் என்றோ, அல்லது ஆணாகப் பிறப்பவர்கள், தம்மை நிச்சயமாக ஆணாகத்தான் உணர்வார்கள் என்றோ சொல்லமுடியாது. ஒருவர், தன்னுணர்வுடனும், ஆணாக அல்லது பெண்ணாக இருக்கும் உணர்வுடனும், தொடர்பாகத் தன்னைத் தான் இனம்காணல் அவரது பாலின அடையாளமாக ( gender identity) அமைகிறது. ஒருவருடைய பாலின அடையாளம் பின்வருவனவற்றை உள்ளடக்கலாம்.

மாற்றுப்பாலினர் (Transgender): ஒன்றுக்கு மேற்பட்ட பாலின வாழ்க்கை அனுபவம் உள்ளவர்கள். தங்களை மாற்றுப்பாலியலாளராக இனம் காண்பவர்கள்.
மாற்றுப்பாலியலாளர் (Transsexual): பிறப்பில் ஒரு பாலினமாக அடையாளம் காணப்பட்டவர்கள், பின்னர் தங்களை வேறாக அடையாளம் காண்பவர்கள். ஒமோன் சிகிச்சை (hormone therapy), பாலை வேறாக மாற்றுவதற்கான சத்திரசிகிச்சை, போன்ற செய்முறைகளுடாக, தாங்கள் உள்வாரியாக உணரப்பட்ட அடையாளத்துக்கு தக்கதாக தங்களுடைய உடல்களை சீரமைப்பவர்கள்.

இருபாலியலாளர் (Intersex): பிறப்பின் போதோ அல்லது பருவமடைந்த பின்போ, உள்ள உடல் சிறப்பியல்புகளிலிருந்து, ஆண் அல்லது பெண் என இலகுவில் பாகுபடுத்தப்பட முடியாதவர்கள்.

மாற்றுப்பாலின உடை உடுப்பவர் (Crossdresser): தமது உணர்வுரீதியான, உளவியல்ரீதியான சேமநிலைகளுக்காக, பொதுவாக எதிர்ப்பாலினருடன் தொடர்புடைய உடைகளை அணிபவர்கள்.
இருந்தாலும் ஒருவரின் இந்தப் பாலின அடையாளத்திலிருந்து அவருடைய பாலியல் போக்கை (sexuel orientation) எதிர்வு கூறமுடியாது. பாலியல் போக்கு பாலின அடையாளத்திலிருந்து வேறுபட்டது. பாலியல் போக்கு என்பது ஒரு தனியாளின் சிறப்பியல்பாகும், அது அவர் யார் என்பதன் ஒரு பகுதியை உருவாக்குகிறது.
பாலியல் போக்கு, ஒரினச்சேர்க்கைப் பெண்களும் ஒரினச்சேர்க்கை ஆண்களும் முதல் இருபாலினமும் வேற்றுப்பால் கவர்ச்சியும் வரையுள்ள மனிதப் பாலின்ப ஆர்வத்தின் வேறுபாட்டு எல்லைகளை உள்ளடக்குகிறது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS