Socialize

பிரான்ஸ் நீதிமன்றில் மீண்டும் அரபாத் மரண வழக்கு

இளவழகன்


அரபாத் நஞ்சூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் அவரின் மரணம் மீண்டும் பிரான்ஸ் நீதிமன்றினால் விசாரணைக்கு Aug 28, 2012 அன்று எடுத்துகொள்ளப்படுள்ளது. இவ்வாறான விசாரணையை நடாத்தும்படி அரபாத்தின் மனைவி சுஹா அரபாத் (Suha Arafat) கடந்த மாதம் பிரான்ஸ் நீதிமன்றை கேட்டிருந்தார். அத்துடன் பாலஸ்தீனிய அதிபர் அபாசும் (Abbas) இவ்வாறான விசாரணை ஒன்றை நடத்துமாறு பிரெஞ்சு அதிபர் ஹோலண்டேயை (Hollande) கேட்டிருந்தார்.

அண்மையில் சுவிஸ் நாட்டை சார்ந்த ஒரு பரிசோதனை நிலையம் அரபாத்தின் உடைகளில் பாரிய அளவில் கதிரியக்க மூலகமான போலோனியும்-210 (polonium-210) இருந்ததை அடையாளம் கண்டிருந்தனர். இந்த வகை கதிரியக்க நஞ்சே 2006 இல் ரஷ்ய உளவாளியான Alexander Litvinenko கொலையிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. முன்னாள் KGB உளவாளியான Litvinenko பின்னாளில் ரஷ்யாவின் ஆட்சியில் உள்ளவர்களின் எதிரியாகியிருந்தார்.

நோய்வாய்ப்பட்டிருந்த அரபாத் 2004 இல் பிரான்சில் உள்ள இராணுவ வைத்தியசாலை ஒன்றிலேயே மரணமடைந்திருந்தார். அரபாத்தை வைத்தியம் செய்த பிரெஞ்சு வைத்தியர்கள் மரணத்திற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை எனவும் அப்போது தெரிவித்திருந்தனர். அதுமட்டுமன்றி அந்த வைத்தியசாலை அரபாத்தின் இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனை முடிவுகளையும் விரைவாக அழித்திருந்தனர்.

அரபாத்தின் உடல் மீண்டும் அகழ்ந்தெடுக்கப்பட்டு அவரில் எலும்புகளில் போலோனியும்-210 உள்ளனவா என ஆராயப்படவுள்ளது. போலோனியும் விரைவில் அழிந்து போகக்கூடியது என்றபடியால் ஆய்வை விரைவில் நடாத்துவது அவசியம்.

இவ்வாறன விசாரணைகளை விரும்பாத இஸ்ரவேல் இந்த மரணத்துக்கும் மொசாட்டுக்கும் (Mossad) எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளது. 1960 களில் இஸ்ரவேலுடன் போர் தொடுத்த அரபாத் 1993 இல் இஸ்ரவேலுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றை செய்திருந்தார். பின் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலன்களை அளிக்காததால் பேச்சுக்களை இடைநிறுத்தியிருந்தார். அக்காலகட்டத்திலேயே அவர் நோய்வாய்ப்பட்டார்.

போலோனியத்தை Marie Curie யும் Pierre Curie யும் (1898 இல்) அடையாளம் கண்டிருந்தமையால் அவர்களின் நாட்டுக்கு (Poland) மதிப்பளிக்கும் பொருட்டு பொலோனியம் என பெயரிடப்பட்டது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS