Socialize

புலிகளுக்கு பணம் சேர்த்தவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

அமெரிக்க சமஷ்டிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளின்படி 2008ல் அவுஸ்திரேலிய சமஷ்டிப் பொலிசரால் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட, இவர் கடந்த நான்கு வருடங்களாக மெல்போர்ணில் சிறை வைக்கப்பட்டிருந்தார். தான் இலங்கைக்கு நாடு கடத்தப்படக் கூடும் என்று காரணம் காட்டி அமெரிக்க, அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் இவர் சமரசம் செய்ய முயற்சித்த போதும் இவரது முயற்சிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மெல்போர்ண் சர்வதேச கல்லூரியின் தலைவராகப் பணியாற்றிய இவர் மெல்போர்ணில் தன் அகதிக்கோpக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட மனைவி, பிள்ளையுடன் வசித்து வந்தார். அவுஸ்திரேலியாவுக்கு வர்த்தக விசாவில் வந்த இவர் நிரந்தர விதிவிட விசாவுக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்.
இவரது மனைவி உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கையொப்பமிட்டு இவரை நாடு கடத்தினால், அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவார் என்று கோரிக்கை விடுத்த போதும் அவர்களின் கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசு நிராகரித்தது. அமெரிக்க நீதித்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி ஒரு ஒப்பந்தத்திற்கு வர இவர் அமெரிக்க சட்டத்தரணி ஒருவரை நாடியதாகவும் சட்டத்தரணிக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இவர் இறுதியில் இருந்ததாகவும் இவரது சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
அத்துடன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவர் மற்றவர்களைக் காட்டிக் கொடுக்க முயன்றபோதும், அவுஸ்திரேலிய அதிகாரிகள் அதில் நாட்டம் காட்டவில்லை. அத்துடன் தன்னுடைய நடவடிக்கைகள் குறித்து இவர் விளக்கமாக அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு காட்டிக் கொடுத்திருந்தார். இந்த நடவடிக்கையை இவரது சட்டத்தரணிகள் ‘குற்றம் சாட்டப்பட ஏதுவாக இருந்த போதிலும் அவர் தன் பங்களிப்பை மறுக்கவில்லை’ என்று கூறியிருந்தனர்.
அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விபரங்களின்படி 2006ல் 28 தொன் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் பெற்றுக் கொள்வதற்கு மாறுவேடத்திலிருந்து அமெரிக்கப் புலனாய்வாளர்களுக்கு ஏழு லட்சம் டொலர்கள் புலிகளால் வழங்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையில் கனடியர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு, திருநாவுக்கரசு வரதராசாவுக்கு 57 மாதம், சிங்கப்பூரியரான ஹனிபா பின் ஒஸ்மானுக்கு 37 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
துளசிதரனுக்கு சொந்தமாக சிங்கப்பூரில் ஹோட்டல் ஒன்று இருந்ததாகவும், விசாரணையின் போது அலெக்ஸ் என்பவர், வரதராசா உட்பட பல்வேறு புலிகளின் தொடர்பாளர்கள் பலரின் பெயர்களை துளசிதரன் காட்டிக் கொடுத்திருக்கிறார்.
இவரது நாடு கடத்தலை அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் நிக்கோலா றொக்சொன் அங்கீகரித்திருந்தார். கடந்த மாசி மாதம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் துளசிதரன் மேன்முறையீடு செய்ததால் இந்த நாடு கடத்தல் தடைப்பட்டிருந்தது. அவரது சட்டத்தரணிகள் அவரது நடவடிக்கை அமெரிக்காவுக்கோ, அவுஸ்திரேலியாவுக்கோ அச்சுறுத்தலாக இருக்கவில்லை என்றும் அவை வெறும் அரசியல் நடவடிக்கைகளே அன்றி பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை அல்ல என்றும் வாதிட்டிருந்தனர்.
ஆயுதங்கள் ஏற்றுமதி, பயங்கரவாத அமைப்புக்கு உதவி வழங்கியது, பணச்சலவை செய்தது உட்பட்ட ஆறு குற்றச்சாட்டுகள் இவர் மேல் சுமத்தப்பட்டிருந்தது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS