Socialize

மாகாண சபை முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியமாகும். – ஜனாதிபதி.

தாயகத்திலிருந்து விஜய்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் நிகழ்த்திய வரவு செலவுத் திட்ட உரையில் “அடுத்த வருடம் மாகாண சபை தேர்தல்களை நடாத்துவதற்கு உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளோம்” எனத் தெரிவித்திருப்பதுடன் முடிவுரையில் “எமது மக்களுக்கு அதிகாரப் பகிர்வினை அர்த்தமுள்ளதாக மாற்றுதற்கு தற்பொழுது காணப்படும் மாகாண சபை முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.” எனவும் தெரிவித்திருக்கிறார்.

அண்மைக்காலங்களில் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்க வேண்டும் எனவும் மாகாண சபைகளை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் குறிப்பாக வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தக் கூடாது எனவும் அரசாங்கத்துடன் இணைந்துள்ள அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இலங்கையில் தமிழ்த் தலைவர்களிடமிருந்தும் தென்னிலங்கை முற்போக்குச் சக்திகளிடமிருந்தும்> இந்தியா மற்றும் சர்வதேச தரப்புக்களிடமிருந்தும் அதற்கெதிரான அதிருப்திகளும் வெளியிடப்பட்டிருக்கும் நிலையிலேயே ஜனாதிபதியின் மாகாண சபைத் தேர்தல்கள் பற்றியும் மாகாண சபை முறைமை மாற்றப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தும் வெளிவந்திருக்கின்றன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மாகாண சபை முறைமை மாற்றப்பட வேண்டும் என உரையில் தெரிவித்திருக்கிற போதும் அது அதிகாரப் பகிர்வினை வழங்குவதையோ அல்லது தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதையோ மையமாகக் கொணட்மையுமா என்பது தற்போது முன்னெழுந்துள்ள கேள்வியாகும்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது உரையில் “அதிகாரப் பகிர்வு என்பது எம்மை கூறுபோடுகின்ற அரசியல் மறுசீரமைப்பாக இருக்க முடியாது. அது எம் அனைவரையும் ஒன்று படுத்த வேண்டும்” என்றே தெரிவித்திருக்கிறார். அத்துடன் “அத்தகைய மறுசீரமைப்புக்கள் அதிக செலவினம் கொண்டதாகவோ மக்கள் மீது கடமையினை ஏற்படுத்தக் கூடிய சிக்கலான நிர்வாக கட்டமைப்பினையோ கொண்டிருக்க முடியhது.” எனவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் ஜனாதிபதி அறிமுக உரையில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு விருத்திகள் மற்றும் நலத் திட்டங்கள் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருந்ததுடன் “சிறுவர்கள் தென்னிலங்கைக்கு கல்விச் சுற்றுலா மேற்கொள்வதன் மூலம் மகிழ்ச்சி அடைகின்றனர். அதே போன்று அலரி மாளிகைக்கு விஜயம் செய்வதுடன் என்னுடனும் உரையாடுகின்றனர். நான் அவர்களின் முகங்களில் இருந்து புதிய நம்பிக்கைளை காண்கிறேன்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் அம் மாகாணத்தில் இடம் பெற்று வருகின்ற மீள்குடியேற்றம்> புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டமைப்பு பணிகளிற்காக அரசாங்கத்தில் அவர்களது நம்பிக்கையினை வைத்திருப்பதன் மூலம் நாமும் ஊக்கமடைந்துள்ளோம்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்துடன் தனது உரையில் “இலங்கையின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் என்னைச் சந்தித்த தமிழ்> முஸ்லிம் அல்லது சிங்களவர் அனைவரும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறந்த வாழ்க்கைத் தரம், மற்றும் நாட்டின் சம அந்தஸ்துடன் வாழ்தல் என்பவற்றையே வேண்டினர்.” என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

இதே வேளை உரையின் இறுதியில்,எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் போன்றவர்களை எமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாக எம்முடன் ஒத்தழைக்க வருமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். இம் முயற்சியானது எமது உள்நாட்டு பிரச்சினைகளில் வெளிநாடுகளின் தலையீடுகளை ஏற்படுத்தாது சுயமாரியாதையுடன் கூடியதாகும்” எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையானது அறிமுக உரையானது, முடிவுரை நீங்கலாக 48 விடயங்களைக் கொண்டதாக அமைந்திருந்த போதும் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகள் மற்றும் புனரமைப்பு – மீள்குடியேற்றங்கள் குறித்து முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக இருக்கவில்லை. மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் பட்டியல் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் மீள்குடியேற்றத்திற்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கீடே வழங்கப்பட்டிருக்கிறது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS