Socialize

முற்பகல் செய்யின்…!

தனோ பரதன்

காஞ்சனா….காஞ்சி…காஞ்சா ……ராஜி கட்டிலில் படுத்திருந்தபடியே மகளை கூப்பிட்டாள்.

என்ன கத்திறிங்கள்! என்று சினந்த முகத்துடன் வெளியே போவதற்கு வெளிக்கிட்டபடியே வந்து நின்றாள் பதினெட்டு வயது மகள் காஞ்சனா, வெளிக்கிட்டு நின்ற மகளை பார்த்த ராஜிக்கு கோபம் வந்தது, இப்ப எங்க ஒடப்போற, பின்னேரம் வந்தா லைப்ரரிக்கு போறன் எண்டு சாட்டு சொல்லிக்கொண்டு எங்கயாவது ஓடிருவாய், முதல் உன்ர சைக்கிளுக்கு ஒரு வழி பண்ணவேணும், சமைக்கமாட்டியம், வீடு கூட்டி நா மட்டும் காணுமே,
ஓகே அம்மா: இப்ப உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்கோ என்றபடியே கழுத்துவரையுள்ள முடிக்கு கிளிப் போட்டபடியே கேட்டாள் காஞ்சனா.

ராசாத்தி எனக்கு கோயிலுக்கு போட்டு வந்தது கால் நாரி எல்லாம் உளையுதம்மா, அச்சாப்பிள்ளை ஒருக்கா அடுப்பில் தண்ணி வைச்சிட்டு கையோட மாட்டுக்கும் கொஞ்சம் தண்ணி வைச்சிட்டு போம்மா என்றபடியே திரும்பிப்படுத்தாள் தாய். காஞ்சனவிற்கு உலகத்திலேயே பிடிக்காத விஷயம் அடுப்புமூட்டுவது, காஞ்சனாவும் மாட்டுக்கு தண்ணி வைத்துவிட்டு மெதுவாக சைக்கிளை எடுத்துக்கொண்டு சிநேகிதி சாந்தியுடன் பறந்துவிட்டாள்.

கொஞ்ச நேரத்தால் குசனிக்கு வந்து பார்த்தால் அடுப்பும் மூட்டவில்லை, கேத்திலையும் காணோம், ராஜிக்கு கோபம் பற்றிக்கொண்டுவந்தது “கடவுளே இதொல்லாம் ஒரு பிள்ளையா, உருப்படாதுகள் என்று மகளை திட்டிக்கொண்டே தேத்தண்ணி வைக்க ஆயத்தமானாள்.

இன்று

சோபாவில் சாய்ந்தபடி விஜே டிவி பார்த்துக்கொண்டே, தட தடவென படியால் இறங்கிவந்த வந்த மகன் வினோத்திடம் ராசா அந்த கிரீன் பின்னையும், ப்ளூ பாக்சையும் எடுத்து கராஜ்க்குள்ள எடுத்து வைச்சிட்டு போங்கோ என்று சொல்லிவிட்டு மீண்டும் டிவியில் மூழகிவிட்டாள் காஞ்சனா, வினோத்தும் எதுவும் பேசாமல் கிச்சினுக்குள் நுழைந்து டீயும், பிரேட்டும் சாப்பிட்டுவிட்டு சப்பாத்தை மாட்டிக்கொண்டு “பாய் அம்மா” என்று வெளியே போய்விட்டான்.

விஜே டிவியில் சரவணன் மீனாக்ஷி தொடர் முடிந்த கையோடு யன்னலால் எட்டிப்பார்த்தாள் காஞ்சனா, வெளியே கிரீன் பின்னும், ப்ளூ பாக்ஸ்ம் நிலத்தில் சரிந்து மிஞ்சிய சின்ன சின்ன பேப்பர்கள் சிதறிக் கிடந்தது மழை வேறு தூறிக்கொண்டு எல்லாத்தையுமே ஈரமாக்கிக்கொண்டிருந்தது.

காஞ்சனவிட்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. கதவைத்திறந்து கொண்டு விறு விறுவென வெளியே போனால் கராஜ் ஆவென்று திறந்திருந்தது, வினோத்தின் சைக்கிளையும் காணவில்லை, அவளுக்கு வந்த கோபத்தில் ஒருகையால் கிரீன் பின்னை இளுத்த இழுப்பில் கிரீன் பின்னின் சில்லு வெடித்து பறந்தது.

பின் எல்லா பாக்ஸ்களையும் கராஜ்ற்குள் வைத்துவிட்டு ஒரு நிமிடம் யோசித்தாள்.

ஒரு நாலடி எட்டிவைத்து இந்த பாக்ஸ்களை எடுத்து வைக்க முடியாமல் போய்விட்டானே, இதல்லாம் ஒரு வேலையா, இந்த சின்ன வேலையைக் கூட செய்யாத பிள்ளையை என்ன செய்ய? நானெல்லாம் இந்த வயதில் எப்படி இருந்தேன் என்று யோசித்துப்பார்த்தாள் காஞ்சனா.

பல சமயங்களில் இவனை விட மோசமாக நான் அம்மாவிடம் நடந்திருக்கிறேன் என அப்போதுதான் அவளுக்கு மண்டையில் உறைத்தது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS