Socialize

யாருக்கு சொல்லியழ? – 4

 

இளவழகன்

ஈரான் நாட்டை சார்ந்த, ஆனால் ஈரானிய அரசை எதிர்க்கும் MEK (Mujahadin-e Khalq) என்ற ஆயுத குழுவை அமெரிக்க அரசு அதன் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கி போராளிகள் பட்டியலில் உள்ளடக்க தீர்மானித்துள்ளது. இந்த குழு 1970 களில் அமெரிக்க அரசியலின் பொம்மையாக இருந்த ஈரானிய தலைவர் ஷாவை எதிர்த்து வன்முறைகளில் இறங்கியிருந்தது. பின் ஈரான்-ஈராக் யுத்தத்தின் போது இது சதாமின் உதவியுடன், ஈராக்கில் இருந்து ஈரான் மீது தாக்குதல்கள் நடாத்தியிருன்தது. இந்த குழுவை 1997 இல் அமெரிக்க அரசியல் தமது பயங்கரவாதிகள் பட்டியலில் இட்டது. பின் 2003 இல் அமெரிக்கா சதாமின் அரசை கவிழ்த்தபோது இக்குழு அமெரிக்கா பக்கம் தாவியது.

கடந்த சில வருடம்களாக இந்த குழுவை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்க அமெரிக்காவின் பெரும் அரசியல் புள்ளிகளான James Woolsey, Porter Gross (CIA), Tom Ridge (முன்னாள் homeland security secretary), Louis Freeh (FBI) போன்றோர் அரசியல் பிரச்சாரம் (lobbying) செய்து வந்துள்ளனர். இவர்களின் உள்நோக்கு பிரான்சில் தலைமையகத்தை கொண்டுள்ள இந்த குழுவை ஈரான் அரசுக்கு எதிராக பயன்படுத்துவதாக இருக்கலாம். அப்படியானால் அமெரிக்க அரசியலில் பயங்கரவாதி என்ற சொல்லுக்கான வரைவிலக்கணம்தான் என்ன?

இவ்வகை கபடம்களுக்கு இன்னுமொரு உதாரணம் துர்கி, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளுள் பரந்துவாழும் மக்களாகிய Kurds. இவர்களின் சனத்தொகை துருக்கியில் (Turkey) சுமார் 15 மில்லியன், சிரியாவில் சுமார் 2 மில்லியன், ஈராக்கில் சுமார் 5 மில்லியன், ஈரானில் சுமார் 7 மில்லியன் என உள்ளது. இவர்களுள் PKK, KDP, PUK என பல குழுக்கள் விடுதலை போராட்டம்களை ஆரம்பித்திருந்தன (அத்துடன் தங்களுக்குள்ளும் பல தடவைகள் முட்டியும் மோதினர்). இவற்றுள் KDP, PUK போன்ற குழுக்கள் பிரதானமாக ஈராக்கின் எல்லைக்குள் இருந்து ஈராக்கிற்கு எதிராக போராடின. சதாம் அமெரிக்க நண்பனாக இருந்தபோது இந்த இரு குழுக்களும் அமெரிக்க அரசியலுக்கு எதிரியான ஈரானுடன் உறவை வைத்திருந்தன. பின் சதாம் அமெரிக்க எதிரியானபோது இவ்விரு குழுக்களும் அமெரிக்கா உட்பட்ட மேற்கின் மனிதநேய பார்வையில் போராளிகள் ஆயினர். அதனால் ஈராக்கிற்குள் ‘மட்டும்’ உட்பட்ட Kurds மக்களுக்கு இவ்விரு குழுக்களின் தலைமயில் அமெரிக்க மற்றும் மேற்கு அரசியல் விடுதலை பெற்றுக்கொடுத்தனர்.

ஆனால் அமெரிக்க அரசியலின் நீண்டகால நண்பனான Turkey யுடன் அந்த நாட்டு எல்லைக்குள்ளிருந்து விடுதலை போர் தொடுத்த PKK என்ற குழு அமெரிக்கா உட்பட்ட மேற்கு அரசியலின் மனிதநேய பார்வையில் பயங்கரவாதி ஆயினர். அத்துடன் அமெரிக்க அரசியல் நோக்கில் Turkey யின் எல்லைக்குட்பட்ட Kurds மக்கள் விடுதலைக்கு அருகதை அற்றவர்களும் ஆயினர்.

உலக அரசியல் அரங்கில் பயங்கரவாதி (terrorist) என்ற சொல்லும் போராளி (rebel) என்ற சொல்லும் அந்தந்த நாடுகளின் அரசியல் வசதி சார்ந்ததா? ஒருவர் ஒரு பயங்கரவாதி என்பதற்கு அவரின் பயங்கரவாத நடவடிக்கைகள் மட்டும் தானே காரணமாகும். அவர் யாருக்கு நண்பன், யாருக்கு எதிரி என்பது இங்கு முக்கியமில்லைதானே. ஆனால் உலக அரங்கில் மனிதநேயம், பயங்கரவாதம் எல்லாமே அரசியல் தான். ஆயுத குழு உலகில் “எனக்கு எதிரானவன் பயங்கரவாதி, என் எதிரிக்கு எதிரானவன் போராளி”.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS