Socialize

யாருக்கு சொல்லியழ? – 5

இளவழகன்

நாலு வருடங்களின் முன் ஒபாமா தான் ஒரு நியாயவாதி, சமாதானம் விரும்பி, சரியானதை மட்டுமே செய்யப்போகும் செயல்வீரன் என்றவாறெல்லாம் உலகுக்கு தன்னை விற்றுருந்தார். ஆனால் அவரின் நாலு வருட செயல்பாடுகளும் அண்மையில் (2012:09:25) அவர் ஐ.நா. கூட்டத்தில் ஆற்றிய உரையின் உட்பொருளும் அவர் வெறும் வழியில் தேங்காயை எடுத்து தெருவில் பிள்ளையாருக்கு உடைக்கும் வல்லமைபடைத்த வாய்ச்சொல் வீரன் மட்டுமோ என்று கேட்க தூண்டுகிறது.

அண்மை துநீசியாவிலும் (Tunisia) எகிப்திலும் நடந்த இரு புரட்சிகளே உண்மையான மக்கள் புரட்சி. இந்த புரட்சிகள் முபாரக் போன்ற அமெரிக்க அரசியலால் பாலுட்டி வளர்க்கப்பட்ட சர்வாதிகளுக்கெதிராக நடந்த மக்கள் புரட்சிகள். உண்மையில் இவை அமெரிக்க அரசியல் சற்றும் எதிர்பாராத திசையிலிருந்து அவர்களுக்கெதிராக திடுப்பென வந்ததோர் பேரிடி. வியப்பில் விழித்தெழுந்த அமெரிக்க அரசியல் முபாரக்கை ஏதாவதொரு வகையில், முன்னரைவிட குறைந்த பலத்துடனாவது தலைமையில் வைக்க பாடுபட்டிருந்தது. அதற்காக முபாரக்கை சில விட்டுக்கொடுப்புகளையெல்லாம் செய்ய பணித்தது. அதனால் தான் எகிப்தின் Tahrir Square இல் புரட்சி பலநாட்களாக சில வன்முறைகளின் மத்தியிலும் நீடித்தது. ஆனால் எதற்கும் பணியாத எகிப்திய மக்கள் புரட்சி அமெரிக்க அரசியலின் கைப்பொம்மையான முபாரக்கை பதவியிலிருந்து வீசியது.

சர்வாதிகாரியான தம் கைபொம்மை பதவியில் இருந்து போனபின் வேறுவழி எதுவுமின்றி அமெரிக்க அரசியல் புரட்சி செய்த மக்களை ஆதரிக்க தொடங்கியது. அதுகூட எகிப்திய மக்களின் நன்மை கருதியல்ல, மாறாக இஸ்ரவேலின் நலன்களை பாதுகாக்கவே. குறிப்பாக முன்னர் செய்யப்பட்ட இஸ்ரவேல்-எகிப்து உடபடிக்கைகளை பாதுகாக்க.

ஆனால் ஒபாமா தனது ஐ.நா. உரையில் “… the United States has supported the forces of change“ என்று கூறியுள்ளார். அவரின் சொல்படி அவர்களின் ஆதரவில் சந்ததிகள்காலமாக பதவியில் இருந்த சர்வாதிகாரிக்கு எதிரான புரட்சிக்கு அவர்கள் ஆதரவு கொடுத்தார்களாம், நம்பினால் நம்புங்கள்.

மத்திய கிழக்கை பற்றி தொடர்ந்து பேசும்போது துநீசியா, எகிப்து, லிபியா, சிரியா, யேமன், ஈரான், ஈராக் போன்ற நாடுகளையெல்லாம் பட்டியலிட்டு விளக்கிய ஒபாமா சவூதி அரேபியா, பஹ்ரைன் போன்ற நாடுகளை தனது பேச்சில் இருந்து தந்திரமாக தவிர்த்திருந்தார். அதன் அர்த்தம் இந்த இரு நாடுகளிலும் ஜனாயகம் பெருக்கெடுத்து ஓடுகின்றது என்பதா, அல்லது அங்கு புரட்சிகள் இல்லை என்பதா? அங்கெல்லாம் இவரின் நிலைப்பாடென்ன?

அவ்வுரையில் ஒபாமா பாலஸ்தினியர் பற்றியும் கூறியுள்ளார். அவரின் கூற்றுப்படி பாலஸ்தினியரின் விடிவுக்கான பயணம் வளைந்து நெளிந்து செல்லும் நெடுந்தூரமாம். அந்த பாதைவழியே பாலஸ்தினியாரை நடக்கட்டாம். அந்த நெடுந்தூர பயணத்தில் ஒபாமாவும் கூடவே நடந்து வருவாராம் (அப்படி வரினும் ஆகக்கூடியது இன்னுமொரு 4 வருடம் தான்). இங்கு அவரின் செய்தி என்னவென்றால் எகிப்தியர், லிபியர், சிரியர் எல்லாம் ஆயுதம் ஏந்தியும் புரட்சி செய்யலாம் ஆனால் பாலஸ்தினியர்கள் மட்டும் புரட்சி செய்யாது road-to-peace வழியே நடந்துகொண்டே இருக்கவேணுமாம். அது தவறி புரட்சி செய்வோர் பயங்கரவாதிகளாம்.

கடந்த வருடம் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விருப்பங்களுக்கு மாறாக பாலஸ்தினியர் ஐ.நா.வில் தம்மை ஒரு நாடாக்க ஜனநாயக முறைப்படி உரிமை கேட்டதுக்காக பலநூறு மில்லியன் டொலர் நன்கொடைகளை இரத்து செய்து தண்டித்திருந்தது ஒபாமா அரசியல். ஆனால் அவர் இப்போது ஆயுதம் ஏந்தி லிபியா மற்றும் சிரியா போன்ற நாடுகளில் போராடும் குழுக்களை பணம் மற்றும் ஆயுதம் கொடுத்து ஆதரிக்கிறாராம். இப்படி செய்யும் இவர் எப்படி ஒரு நியாயவாதி ஆகலாம்?

2011 ஆம் ஆண்டு வைகாசியில் ஒபாமா ஆற்றிய உரை ஒன்றில் இஸ்ரேல்-பாலஸ்தினியர் தீர்வு 1967 இல் இருந்த எல்லைகளை அடிப்படையா கொண்டிருக்கும் என கூறியிருந்தார். இவ்வாறு பேசியதற்காக அவர் ஓவல் அறையில் பூட்டிவைத்து நையப்புடையப்பட்டாரோ என்னவோ அதன்பின் ஒபாமா 1967 எல்லைகள் பற்றி கதைப்பதே இல்லை. உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆனதுபோல் ஒபாமாவும் கடந்த நாலு ஆண்டில் வளைந்து நெளிந்து அமெரிக்க அரசியலுக்கேட்ப பொய்புரட்டு அரசியலில் இறங்கி உள்ளாரோ?

சமாதானம் நிலைநாட்டவென மத்திய கிழக்கில் இருந்த அமெரிக்க படைகளை பாரிய அளவில் எடுத்துவிட்டு பின் ஏன் அவைகளை ஆசிய-பசிபிக் பிராந்தியங்களுக்கு அனுப்புகிறார்? அதற்காகவா இவருக்கு சமாதானத்துக்கான நோபெல் பரிசு கொடுக்கப்பட்டது?

இதுவரை காலத்தில் ஒபாமா உலகுக்கு ஏதாவது நன்மை செய்திருந்தாரா? இவர்கள் வளர்த்த சர்வாதிகாரிகளை சாதாரண மக்கள் அழித்தபின் அதை தமது சாதனைகளாக இவர்கள் உரிமை கொள்ளலாமா?

 

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS