Socialize

வன்முறைதான் வழியா?

ஸ்ரீரஞ்சனி

வன்முறை என்பது, அதிகாரம் அல்லது உடற்பலத்தைப் பயன்படுத்தி ஒருவரை அல்லது அவர் சார்ந்த குழுவைத் துன்புறுத்துதல் அல்லது பொருள்களைச் சேதப்படுத்துவதன் மூலம் குறித்தவரை அல்லது குறித்த குழுவைப் பயப்படுத்துதல் ஆகும்.

முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு வன்முறையே சிறந்த வழி எனப் பலர் கருதுகின்றனர். அதற்கு, அவர்கள் வளர்ந்த முறையும், வாழ்ந்த சு10ழலும் முக்கிய காரணமாகின்றன.
“அடி வாங்கி வளர்ந்ததால் தான், நான் இன்று ஒர் உயர்நிலையில் இருக்கிறேன். தழும்பு வந்தால் பெற்றோர்களிலும், ஆசிரியர்களிலும் ஒரு மரியாதையையும் பயமும் தானாகவே வந்துவிடும்!”- எமது சமுதாயத்தில் பெரியமனிதர் என மதிக்கப்படும் ஒருவர், இங்கு நிகழ்ந்த நடன அரங்கேற்றமொன்றில் சொன்ன வசனங்கள் இவை. இவ்வகையான நம்பிக்கைகளும் வன்முறைக்கு வித்திடுகின்றன.

அத்துடன் எமது இளம் சந்ததியினரில் சிலர் வன்முறைக்கு அடிமையாவதற்கு, துரதிஷ்டவசமாக எமது நாட்டின் அரசியல் வரலாறும் ஒரு காரணமாக அமைகிறது.
Spare the rod and spoil the child என்றும், அடியாத மாடு படியாது என்றும், அடியைப் போல் அண்ணன் தம்பி உதவான் என்றும் நம்பி, ஒழுங்காட்சி முறையாக, பிரச்சனையைத் தீர்க்கும் ஒரு வழியாக உடல் துன்புறுத்தலைத்தான் பலர் இன, மத பேதமின்றி காலகாலமாகக் கையாண்டு வருகின்றார்கள்.

“உன்னைத் திருத்துவதற்காகத்தான் அடித்தேன், அது உன் மேல் உள்ள கரிசனையால் தான்”, எனச் சொல்லிச் சொல்லி தண்டனை வாங்குபவரின் மனம் அதை அப்படியே நம்புமாறு வைத்துவிடுகிறார்கள் பலர். அவ்வாறு நம்புபவர்களில் அனேகமானோர் தாங்கள் அதிகாரத்துக்கு வரும் போது அதைத் தான் தாமும் செய்கிறார்கள்.
உண்மையில் அடிக்கும் போது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், ஏதாவது ஒருவிதத்தில் தொந்தரவு தருபர்களிடமிருந்து தப்புவதற்கும் வன்முறை தான் வழி என்றும் கோபம் வந்தால் அடிக்கலாம் என்றும் தான் பிள்ளைகளுக்கு நாம் கற்பிக்கின்றோம். பின்னர் பிள்ளைகள், எமது முன்மாதிரியைப் பார்த்து அதே நடத்தையை மற்றவர்களில் காட்டுகிறார்கள்.

பிள்ளைகளின் ஒழுங்காட்சி என்பது, எது ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நடத்தை, எது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத நடத்தை என்பதைப் பிள்ளைக்குக் கற்பிப்பதாகும். அடியின் வேதனையில், அதனால் ஏற்பட்ட பயத்தில் அல்லது கோபத்தில் பிள்ளை இருக்கும் போது, பிள்ளை செய்த விடயம் ஏன் பிழையென்றோ அல்லது அதை எப்படிச் சரியாகச் செய்யலாம் எனறோ பிள்ளைக்கு விளங்கப்படுத்த முடியாது. எனவே பிள்ளை கற்றுக் கொள்ளப்போவதொல்லாம் அடி வாங்காமலிருக்க வழி தேடுவது தான்.

அதாவது அடுத்த முறை குறிப்பிட்ட அந்த விடயத்தை பெற்றோருக்கு தெரியாமல் எப்படிச் செய்யலாம் என்பதில்தான் பிள்ளையின் சிந்தனை செல்லும்.

உதாரணத்துக்கு தண்டனைக்குப் பயந்து, பிழை செய்யாமல் இருக்கப் பழகிய நம் தலைமுறையினரும், சரி பிழைகளை அறிந்து பிழை செய்யாமலிருக்கும் நம் இளைய தலைமுறையினரும் Strawberry picking செய்வதை அவதானித்தால், நம் தலைமுறை அக்கம் பக்கம் பார்த்து பழங்களை வாய்க்குள் போடுவதையும் “don’t eat them, look at the sign” என்று நம் இளைய தலைமுறை நம் தலைமுறைக்குச் சொல்வதையும் கவனிக்கலாம்.

அத்துடன் சில பிள்ளைகளுக்கு தாம் நினத்த விடயத்தைச் செய்து முடிப்பதற்கு, சிலவேளைகளில் அடிவாங்குவது, மற்ற விதமான ஒழுங்காட்சி முறைகளை விட சுலபமான வழியாக கூடத் தோன்றலாம். அப்படி ஒரு நிலை வந்தால் அந்த அடி எந்தவித பயனையும் கொடுக்கமாட்டாது.
தண்டனை கொடுப்பதை ஒழுங்காட்சிப்படுத்தலின் வழக்கமாகக் கொண்ட பெற்றோர்களுக்கு வளர்ந்த பிள்ளைகளை ஒழுங்காட்சிப்படுத்துவது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.
அடிப்பதால் பின்வரும் விளைவுகளை ஏற்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.
பிள்ளைகளின் சுயமதிப்புக் குறையும்.
சொன்னால் அடி விழுலாம் என்ற மனப்பயத்தால் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான எண்ணப்பரிமாற்றம் தடைப்படும்.
பிள்ளைகளின் கீழ்படியும் அல்லது இசைந்து போகும் தன்மை குறையும்.
பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் திறனை, காரணகாரியங்களை ஆராயும் மனப்பான்மையை பிள்ளைகள் இழக்கின்றனர்.
பிள்ளைகள் ஆக்கிரமிப்பாளர்களாக மாறும் சாத்தியக்கூறு அதிகரிக்கிறது.
தனது வலி தான் பெரிதாகத் தெரியுமாதலால், தனது நடத்தையால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை பிள்ளை விளங்கிக்கொள்ளமாட்டாது. அதனால் தனது நடத்தை பற்றி வருத்தப்படவோ, தனது நடத்தையால் பாதிக்கப்பட்டவர்களில் மீது அனுதாபப்படவோ மாட்டாது.
தனது நடத்தைக்கு தான் பொறுப்பேற்க பிள்ளைக்கு வாய்ப்பில்லாமல் போகிறது.
பெற்றோர்களில் கோபமும் பயமும் ஏற்படுவதால் பாசப்பிணைப்பு குறையும்.

மிகுந்த பலாத்காரத்தை அனுபவிக்கும் பிள்ளைகளில் பின்வரும் அறிகுறிகளைப் பார்க்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன.
அளவுக்கதிக கோபம் அல்லது பயம்.
பொருள்களை உடைத்தல் அல்லது நாசம் செய்தல்.
தனிமை விரும்பல்.
சுயமதிப்புக் குறைவு.
எதையும் எதிர்மறையாகப் பார்க்கும் இயல்பு.
மன அழுத்தம்.
ஏனைய பிள்ளைகளைத் துன்புறுத்தும் தன்மை.
தற்கொலை செய்யும் முனைப்பு.
குடிக்கு அல்லது போதைக்கு அடிமையாதல்.
கொலை களவு கற்பழிப்பு.
எனவே வன்முறையை இல்லாது ஒழிக்க, பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே பாதுகாப்பான, அன்பான உறைவை வளர்த்தெடுத்தல், பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வு, அற்ககோல். போதைப் பொருள் போன்றவற்றின் பாதிப்புக்கள் பற்றிய அறிவு என்பன மிக அவசியம் ஆகும்.
உசாத்துணை :www.extension.umn.edu/distribution/familydevelopment

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS