Socialize

வருது வருது! விலகு விலகு! ஐபோன் வெளியே வருது…!

ஜோர்ஜ்

விற்பனைக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் ஐபோன் 5 செல்லிடப் பேசிகளை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது அப்பிள் நிறுவனம். டீன் ஏஜ் பிள்ளைகளும், விலாசம் காட்டும் பெரியோருமாய் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபோன் 5 புதிய பிறவி எடுத்து வந்திருக்கிறது. அன்ட்ரோயிட் ரக செல்லிடப் பேசிகள் ஏற்கனவே கொண்டுள்ள விடயங்களையே இப்புதிய ஐபோனும் கொண்டிருந்தாலும், அப்பிள் ரசிகர்களுக்கு இது தேனோடு சேர்ந்த தௌ;ளமுதம். மெய் சிலிர்த்துப் போய் இருக்கிறார்கள்.
ஏற்கனவே இருந்த 3.5 அங்குலத் திரை போய் நான்கு அங்குலத் திரை வந்திருக்கிறது. உயர்ந்து மெலிந்த புதிய ஐபோன் வெறும் 7.6 மிமீ தடிப்பானதுடன், 112 கிராம் நிறையை மட்டுமே கொண்டிருக்கிறது. Long Term Evolution எனப்படும் LTE தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தகவல் பரிமாறும் இந்த புதிய ஐபோன், தரவுகளைப் பரிமாறுவதில் செக்கனுக்கு நூறு மெகாபிட் வேகம் கொண்டது.

முன்னைய ஐபோன் 4S மாதிரியைப் போலன்றி, புதிய ஐபோனில் உள்ள CPU இரு மடங்கு வேகம் கொண்டது. இதன் மின்கலம் நீண்ட நேரம் பாவனைக்கு உதவக் கூடியது. எட்டு மணி நேரம் பேசவும் இணையத் தளத்தைப் பார்வையிடவும், பத்து மணி நேரம் வீடியோ பார்க்கவும், 40 மணி நேரம் பாடல்கள் கேட்கவும் 225 மணி நேரம் அழைப்புகளுக்காக காத்திருக்கவும் வல்லது இந்த புதிய ஐபோன்.

இதில் எட்டு மெகாபிக்சல் கமெராவும் உண்டு. இந்தக் கமெரா மூலம் 3264 ஒ 2448 பிக்சல் படங்களை எடுக்க முடியும். மிகவும் குறைந்த ஒளியில் படம் பிடிக்கக் கூடிய வில்லைகளைக் கொண்டது இந்தக் கமெரா.

முன்னைய ஐபோன்கள் போலன்றி, இதனை மற்றக் கருவிகளுடன் இணைப்பதற்கோ, மின்னூட்டுவதற்கோ பயன்படும் இணைகருவி எட்டு முனைகளை மட்டுமே கொண்டது. முன்னைய இணைகருவி அகலமானதாகவும் 30 முனைகளையும் கொண்டிருந்தது.
16 ஜிகாபைட் போன்கள் 199 டொலருக்கும், 32 ஜிகாபைட் போன்கள் 299 டொலருக்கும் 64 கிகாபைட் போன்கள் 399 டொலருக்கும் விற்பனையாகும். இந்த விலைகள் தொலைபேசி நிறுவனங்களுடன் 2 வருடத்திற்கு மாதாந்த ஒப்பந்தம் செய்யும்போதே கிடைக்கும். முன்னைய ஐபோன் 4Sமொடல்கள் 100 டொலருக்கும் ஐபோன் 4 மொடல்கள் இலவசமாகவும் கிடைக்கும்.

செப்டம்பர் 21ம் திகதி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, ஹொங்கொங், சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் புதிய ஐபோன் விற்பனைக்கு வரும். செப்டம்பர் 28ம் திகதி மேலும் நூறு நாடுகளிலும் வருட இறுதியில் நூறு நாடுகளிலும் ஐபோன் 5 அறிமுகமாகும்.

அப்பிள் பெருமை பேசும் பலவேறு புதிய திறன்கள் ஏற்கனவே அன்ட்ரோயிட் ரக போன்களில் வந்து நீண்ட காலமாகி விட்டன. சாம்சுங், மோட்டோரோலா, எல்ஜி போன்ற நிறுவனங்கள் ஐபோன்களை மிஞ்சும் மொடல்களை அடிக்கடி வெளியில் விடுகின்றன.
வெறும் அப்பிள் படத்தைச் சுமந்திருப்பதற்காக இவ்வளவு பணத்தைக் கொட்டியழ வேண்டியதில்லை என்பாரும் உளர்.

உங்களுக்கு அதைப் பற்றியெல்லாம் எதற்கு வீண் கவலை?
பெட்டி, படுக்கைகளுடன் தயாராகுங்கள். அந்தக் காலத்து எம்.ஜி.ஆர், சிவாஜி ரசிகர்கள் போல, முதல் நாள் இரவே கடை முன்னால் முகாம் அமையுங்கள். கிடைத்ததும் உற்றார், உறவினர்களுக்கு மட்டுமன்றி, முடிந்தால் 24 மணி நேர வானொலிகளுக்கும் ஐபோனில் அழைத்து விலாசம் காட்ட வேண்டியது தான்.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS