Socialize

CBO: அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் முடங்கும்

இளவழகன்

அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் முடங்கும் என அமெரிக்க Congressional Budget ஆபீஸ் (CBO) கூறுகிறது. இந்த அமைப்பு இன்று (Aug 22 , 2012) வெளியிட்ட கணிப்பின்படி தற்போது நடைமுறையில் உள்ள வரி குறைப்புகள் நிறுத்தப்பட்டு அதேவேளை அரச செலவீனம்களும் குறைக்கப்பட்டால் அமெரிக்க பொருளாதாரம் 2013 இல் மீண்டும் முடங்கும். அதாவது அமெரிக்க பொருளாதாரம் 0.5% ஆல் சுருங்கும் என கூறப்பட்டுள்ளது. கடந்த தையில் 2013 ஆம் ஆண்டு 1.1% பொருளாதார வளர்ச்சியை கொண்டிருக்கும் எனவும் பின்னர் வைகாசியில் முன் கூறியதை மாற்றி 2013 இல் பொருளாதார வளர்ச்சி 0.5% ஆக இருக்கும் என்றும் கூறியிருந்தனர்.

அத்துடன் தற்போதுள்ள 8.2% ஆகவுள்ள வேலைவாய்ப்பின்மை 9.1% ஆக உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிக அளவு வேலைவாய்ப்பின்மை மக்களின் மனோநிலையை பாதித்து அதனால் அவர்கள் கொள்வனவுகள் செய்வதை குறைக்கலாம். அது பொருளாதாரம் வளர்வதை தொடர்ந்து முடக்கும்.

அடுத்த வருட முதல் அரை ஆண்டின் பொருளாதார முடக்கம் மிகவும் பாதிப்பானதாக இருக்கும் என்றும் இந்த அரை ஆண்டில் பொருளாதாரம் 2.9% ஆல் சுருங்கும் எனவும் கூறியுள்ளனர். இதே காலத்திற்கு அண்மையில் 1.3% பொருளாதார சுருக்கத்தையே எதிர்பார்த்தனர்.

இவர்கள் அடுத்த வருட இரண்டாம் அரை ஆண்டின் வளர்ச்சியையும் திருத்தி உள்ளனர். முன்னர் இக்காலத்தில் 2.3 % பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கூறியதை மாற்றி இப்போது 1.9 % பொருளாதார வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று திருத்தயுள்ளனர். இப்படியாக மீண்டும் மீண்டும் பொருளாதார கணிப்புகளை முன்னுக்கு பின் முரணாக மாற்றுவதன் மூலம் தமக்கே பொருளாதாரம் எங்கு செல்கின்றதென தெரியாது என்று பொருளியல் நிபுணர்களே மறைமுகமாக கூறுகின்றனர்.

தற்போது அமெரிக்காவின் debt/GDP வீதம் 73% ஆகவுள்ளது. 1950 ஆம் ஆண்டின் பின் இப்போதே இந்த அளவீடு இந்த நிலையை அடைந்துள்ளது. இந்த debt/GDP வீதம் மிகவும் அதிகரித்தால் அமெரிக்க கடன் பெறுவது மிகவும் கடினமாகும். கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகள் இந்தவகை இடருள் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வகையான பொருளாதார மந்த செய்திகள் ஒபாமாவிற்கு எதிராக அவரின் எதிர் அணியினால் தேர்தல் களத்தில் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஒபாமா நிருவாகம் பாரிய அளவிலான பணத்தை செலவு செய்திருந்தாலும் பொருளாதாரம் வளரவில்லை என்பது இங்கு உண்மை.

அமெரிக்க பொருளாதார வருடம் புரட்டாதி மாத முடிவில் முடிவடையும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Share This Post

DeliciousDiggGoogleStumbleuponRedditTechnoratiYahooBloggerMyspaceRSS